தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது பழுதாகி நின்ற லாரி.. திருவள்ளூரில் பரபரப்பு! - ரயில் போக்குவரத்து பாதிப்பு
🎬 Watch Now: Feature Video
Published : Mar 5, 2024, 4:33 PM IST
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு - திருநின்றவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே, இன்று காலை சுமார் 10 மணியளவில், சென்னை - திருவள்ளூர் சிடிஎச் சாலை வழியாக வந்த கனரக லாரி ஒன்று, வேப்பம்பட்டு ரயில்வே கேட் பகுதியை கடக்க முயன்றபோது, தண்டவாளத்தின் இடையே பின்சக்கர டயரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பழுதாகி நின்றது.
இது குறித்த தகவல் உடனடியாக கேட் கீப்பர் மூலம் திருவள்ளூர் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சென்னை - அரக்கோணம், அரக்கோணம் - சென்னை ஆகிய இரு மார்க்கங்களில் வந்து கொண்டிருந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர், தண்டவாளத்தின் இடையே சிக்கிக் கிடந்த லாரியை ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அப்புறப்படுத்தினர். பின்னர், வழக்கம்போல் ரயில்கள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேர காலதாமதத்திற்கு பின் இயக்கப்பட்டன. இது குறித்து திருவள்ளூர் ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.