டேங்கர் லாரிக்குள் ரகசிய டேங்க் அமைத்து பெட்ரோல் திருடிய பலே டிரைவர் கைது!
🎬 Watch Now: Feature Video
Published : Mar 1, 2024, 12:47 PM IST
ஈரோடு: ஈரோடு அடுத்துள்ள கவுண்டச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் கீர்த்திராஜா. இவர், தான் வசிக்கும் பகுதியில், பொன்சங்கர் ஏஜென்ஸி என்ற பெயரில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று (பிப்.29) கீர்த்திராஜாவின் பங்கிற்கு, பெட்ரோல் சப்ளை செய்யக் கோவையில் இருந்து டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது.
அப்போது, சப்ளை செய்ததில் சுமார் 250 லிட்டர் அளவிலான பெட்ரோல் குறைவாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கீர்த்திராஜா, இதுகுறித்து விசாரித்துள்ளார். விசாரணையில், லாரியில் உள்ள டேங்கின் உட்புறத்தில், சிறிய அளவிலான ரகசிய டேங்க் பொருத்தி பெட்ரோலைத் திருடியது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கீர்த்திராஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வெள்ளோடு போலீசார், லாரி ஓட்டுநரான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரைக் கைது செய்ததோடு, சம்பந்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள லாரியின் உரிமையாளரான கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல் சப்ளை செய்யும் டேங்கர் லாரிக்குள் ரகசிய டேங்க் அமைத்து பெட்ரோல் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.