சேலம்: சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீராணம் பகுதியில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, மணிகண்டன் யாரிடம் மாத்திரைகள் வாங்கினார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, சித்தனூர் பகுதியை சேர்ந்த மிதிலேஷ் கிரண் (வயது 20) என்பவரிடம் இருந்து மணிகண்டன் போதை மாத்திரைகளை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து 5-க்கும் மேற்பட்ட மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மிதிலேஷ் கிரண் யாருக்கெல்லாம் போதை மாத்திரைகளை சப்ளை செய்தார்? எங்கிருந்து மாத்திரைகள் வாங்கப்பட்டது ?என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சேலம் ரயில்வே ஜங்ஷன் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகளை பயன்படுத்தி வருவதும், ஊசியால் போதை மருந்து போட்டு கொள்வதும் தெரியவந்தது.
இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு குழு அதிகாரிகள் அசோகன் மற்றும் பாலு ஆகியோர் தனியார் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அங்கு பல மாணவர்கள் போதை மாத்திரை மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து சேலம் டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி, தலைமையிலான தனிப்படையினர் நேற்று (ஜன.23) நள்ளிரவு அதிரடியாக சென்று ஒன்பது பேரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் திருவா கவுண்டனூர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்கின்ற வெங்கடேஷ் (31), ராம்குமார் (34), மனோஜ் பிரபு (30 )அருண் பிரபு 2(8), அழகாபுரம் பகுதியை சேர்ந்த டேனியல் (20), சூரமங்கலம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (31 ), ஜாகிர்ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கலையரசன்( 33), சஞ்சய் குமார் ( 20), கலர் காடு பகுதியை சேர்ந்த விஜயகுமார்( 30) என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!
இதையடுத்து அவர்களிடம் இருந்து 7900 போதை மாத்திரைகள், தடை செய்யப்பட்ட போதைப் பொருளான ஹான்ஸ் 25 கிலோ, கூல் லிப் 14 கிலோ மற்றும் இரண்டு கார்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் ஒன்பது பேரும் சேலத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து உதவி கமிஷனர் ஹரிசங்கரி கூறுகையில், “கல்லூரி இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்கப்படுகிறது. குறிப்பாக இந்தியா மார்ட் என்ற ஆன்லைன் இணைய தளம் மூலம் இவர்கள் குறைந்த விலைக்கு மாத்திரைகளை அதிகளவு பெற்றுள்ளனர். அதனை ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் என அதிக அளவில் விற்பனை செய்து வந்ததுள்ளது விசாரணையில் தெரிகிறது. இவர்களுக்கு துணையாக செயல்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.