ஒரே நாளில் சரிந்த மல்லிகைப்பூ விலை! கிலோவுக்கு ரூ.2,500 சரிந்ததால் விவசாயிகள் கவலை..! - Erode News
🎬 Watch Now: Feature Video
Published : Jan 28, 2024, 10:06 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கெஞ்சனூர், தாண்டாம்பாளையம், தயிர்ப்பள்ளம், சிக்கரசம்பாளையம், பெரியகுளம், ஆலாம்பாளையம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மல்லிகை, முல்லைப்பூ சாகுபடியினை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு மற்றும் பூக்களின் மொட்டுகளில் நோய் தாக்கியதால் மல்லிகைப்பூ உற்பத்தி ஏக்கருக்கு 10 கிலோவில் இருந்து 1 கிலோவாக குறைந்தது. சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் மல்லிகை கிலோ ரூ.4,100 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போனது.
மேலும், நேற்று (ஜன. 27) கேரளாவில் பண்டிகை காரணமாகப் பூக்களின் தேவை அதிகரித்ததால், மல்லிகைப் பூக்களை ஏலம் எடுக்கக் கேரளா வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது. இதனால் நேற்று (ஜன. 27) மல்லிகை கிலோ ரூ.4,620 ஆகவும் முல்லை கிலோ ரூ.2,051 ஆகவும் விலை உயர்ந்து விற்பனையானது.
இந்நிலையில், இன்று (ஜன. 28) கேரளா மார்கெட் இல்லாததால் பூக்கள் விலை கிலோ ரூ.2,500 என அப்படியே பாதியாகக் குறைந்துள்ளது. அதாவது நேற்று (ஜன. 27) கிலோ ரூ.4,620க்கு விற்கப்பட்ட மல்லிகை இன்று (ஜன. 28) கிலோவுக்கு ரூ.2,100 எனவும் முல்லை கிலோ ரூ.700 ஆகவும் பாதியாக விலை சரிந்தது.
பூக்களின் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளதால், சீரான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு வாசனைத் திரவிய ஆலை கட்ட வேண்டும் என்றும் பூ விவசாயிகள் தமிழக அரசிற்குக் கோரிக்கையை வைத்துள்ளனர்.