திண்டுக்கல் புனித அந்தோணியார் திருவிழா ஜல்லிக்கட்டு போட்டி.. காளைகள் முட்டியதில் 55 பேர் காயம்! - jallikattu
🎬 Watch Now: Feature Video
Published : Feb 18, 2024, 10:45 PM IST
திண்டுக்கல்: நத்தம் அருகே தவசி மடையில் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. போட்டியைத் திண்டுக்கல் கோட்டாட்சியர் கமலக்கண்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல்,திருச்சி, தேனி,மதுரை போன்ற மாவட்டங்களிருந்து 680 காளைகள் களமிறங்கியது.
257 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாகச் சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடி வீரர்களுக்குப் பிடியில் சிக்காமல் காளைகள் துள்ளிச் சென்றன. காளைகளைப் போட்டிப் போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் சைக்கிள்,அண்டா,பேன் ,வெள்ளிக் காசுகள்,கட்டில்,பீரோ எனப் பல பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 55 பேர் காயமடைந்தனர். இதில் மாடுபிடி வீரர்கள் 21 பேரும், பார்வையாளர்கள் 12 பேரும்,மாட்டின் உரிமையாளர்கள் 20 பேரும் மற்றும் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த 2 பேரும் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 9 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளைத் தவசி மேடை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.