வால்பாறை அருகே நியாய விலைக்கடையை சூறையாடிய காட்டு யானைக் கூட்டம்!
🎬 Watch Now: Feature Video
Published : Feb 4, 2024, 4:11 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் டவுன் பகுதியில் ரெட் ரோஸ் நியாய விலைக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில், சுமார் 3 மணியளவில் இந்த நியாவிலைக் கடைக்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம் கடையை சூறையாடி உள்ளது. பொதுமக்கள் விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த 75 கிலோ சர்க்கரை, 30 லிட்டர் பாமாயில், அரிசி உள்ளிட்ட பொருட்களை யானைகள் சூறையாடி உள்ளது.
காலையில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் கடை உரிமையாளர் சென்று பார்த்தபோது, யானைகள் கடையை சூறையாடியது தெரிய வந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அளிக்கக்கூடிய விநியோகப் பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
தொடர்ந்து இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுமக்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்ட வனத்துறையினர், “யானைகள் பல குழுக்களாக பிரிந்து இருப்பதால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. மேலும் குடியிருப்பு அல்லது தங்கள் பகுதிக்கு வரும் யானைக் கூட்டங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், அப்பகுதியில் சுற்றித் தெரியும் காட்டு யானைகளை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "தற்போது வால்பாறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் யானைக் கூட்டங்கள் குழுக்களாக இருக்கின்றது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், உணவு தேடி பொதுமக்கள் இருக்கும் பகுதிகளுக்கு யானைகள் வரத் தொடங்கியுள்ளது. ஆதலால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளிய வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மற்றும் வனத்துறையினர் இரவு பகலாக சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்" என்றும் தெரிவித்துள்ளனர்.