திடீரென திருப்பத்தூரில் வந்திறங்கிய ஹெலிகாப்டர்.. கல்லூரிக்கு எச்சரிக்கை! - ஏலகிரி
🎬 Watch Now: Feature Video
Published : Jan 23, 2024, 8:16 AM IST
திருப்பத்தூர்: பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ரத்னாஜெயின் (50) என்பவருடைய மகனுக்கு, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தங்கக் கோட்டையில் திருமண நிகழ்வை வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில், மணமக்களை அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்து வாடகைக்கு ஹெலிகாப்டர் ஒன்றையும் வர வைத்துள்ளனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென ஏலகிரி மலையில், டான் போஸ்கோ கல்லூரி நிர்வாகத்திற்குச் சொந்தமான இடத்தில் வந்து இறங்கியுள்ளது.
அதனால் அந்த ஹெலிகாப்டரைக் காண அப்பகுதி மக்கள் கூட்டம் சேர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்திடமும், மாவட்ட போலீசாரிடமும் முறையான அனுமதி பெறாமல், ஹெலிகாப்டர் வந்து இறங்கியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவலறிந்து வந்த ஏலகிரி மலை போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் இறங்கியதாலும், இது குறித்து முறையாக கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து இருக்க வேண்டும் என கல்லூரியின் முதல்வர் போஸ்கோ அகஸ்டியனிடம் போலீசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, இது போன்ற தவறு இனிமேல் நடக்காது எனவும், கல்லூரியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.