வள்ளியூர் ரயில்வே தரைப்பால மழை வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து.. பயணிகள் பத்திரமாக மீட்பு! - Government bus stuck in Tirunelveli - GOVERNMENT BUS STUCK IN TIRUNELVELI
🎬 Watch Now: Feature Video
Published : May 15, 2024, 9:15 PM IST
திருநெல்வேலி: கோடை வெயில் வாட்டி எடுத்த நிலையில், திருநெல்வேலியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சுமார் 65 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து, வள்ளியூர் அடுத்த ரயில்வே தரைப்பாலத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது, அப்பகுதியில் தேங்கிய மழை வெள்ளத்தில் சிக்கி பேருந்து நின்றுள்ளது. இதனால் பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 65க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் தவித்துள்ளனர்.
இதன் காரணமாக வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வள்ளியூர் தீயணைப்புத் துறையினர், பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரையும் அவசரக் கதவை திறந்து பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, மீட்கப்பட்டவர்கள் மாற்று பேருந்து மூலம் திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.