பட்டாக் கத்தியுடன் வலம் வரும் ரவுடி கும்பல்.. மாமூல் தர மறுக்கும் வியாபாரிகளுக்குச் சரமாரி வெட்டு! - rowdy attack in chennai - ROWDY ATTACK IN CHENNAI
🎬 Watch Now: Feature Video
Published : May 14, 2024, 4:14 PM IST
சென்னை: சென்னையில் ரவுடி கும்பல் பட்டாக் கத்தியுடன் கடைகளில் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டை ராமானுஜம் தெருவில் துணிக்கடைகள், காலணி கடைகள், துரித உணவகங்கள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்றிரவு (திங்கட்கிழமை) அப்பகுதியில் உள்ள உசேன் என்பவருக்குச் சொந்தமான காலணி கடைக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல், கத்தியைக் காட்டி மாமூல் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடை வியாபாரி உசேன் அவர்களுக்கு மாமூல் தர மறுத்ததாகவும், இதனால் அந்த கும்பல் கடை உரிமையாளர் உசேனின் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடியதாகவும் தெரியவருகிறது.
அதேபோல், அப்பகுதியில் இருக்கும் மற்ற கடைகளிலும் நுழைந்த அந்த கும்பல், கடையின் உரிமையாளர்களைக் கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பி ஓடியுள்ளது. மாமூல் கேட்டு பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடி கும்பல் அப்பகுதியில் உள்ள கடைகளில் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி வியாபாரிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், போலீசார் அப்பகுதிகளில் சரிவர ரோந்து பணியில் ஈடுபடாததே இதற்கு காரணம் என அப்பகுதி வியாபாரிகள் குற்றம்சாட்டும் நிலையில், போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.