அரக்கோணம் அருகே உரிய ஆவணம் இல்லாத ரூ.45 லட்சம் பறிமுதல்... சிக்கியது எப்படி? - lok sabha election 2024
🎬 Watch Now: Feature Video
Published : Mar 19, 2024, 8:52 AM IST
ராணிப்பேட்டை: நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் தேர்தல் விதிகளை மீறி பணப்பட்டுவாடா நடக்காமல் தடுக்க பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் சோதனை சாவடியில் செந்தில்குமார் தலைமையிலான யினர் நேற்று திங்கட்கிழமை இரவு அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.45 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார், காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தார்.
அந்த விசாரணையில் திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் நோக்கி கார் வருவதாகவும், மேலும் காரில் இருந்த பணம் தனியார் வங்கிக்கு சொந்தமானது என்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் அவர்கள் வைத்திருந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த தொகையும், காரில் இருந்து தொகையும் சரியாக இருந்தது. ஆனால், ஆவணத்திலிருந்த காரின் எண்ணும், பணம் கொண்டு வந்த காரின் எண்ணும் வேறுபட்டிருந்தது.
இதனால் அந்த கார் பணத்துடன் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ராணிப்பேட்டையிலிருந்து வருமான வரி அதிகாரிகள் வந்து உரிய விசாரணை நடத்தினர். மேலும், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் உரிய ஆவணம் இன்றி பணம் கொண்டு சென்றது கண்டறியப்பட்டது. மேலும், அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.