பாழாகும் நெல்மணிகள்..! நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்க ஈரோடு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை - TN farmers
🎬 Watch Now: Feature Video
Published : Jan 31, 2024, 8:29 AM IST
ஈரோடு: பவானிசாகர் அணையின் மூலமாக கீழ்பவானி பாசன கால்வாய், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன கால்வாய், காளிங்கராயன் பாசன கால்வாய் மற்றும் கொடிவேரி உள்ளிட்ட பாசனங்கள் மூலமாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
இதில், கீழ்பவானி பாசனம் மூலமாக ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரை விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இதன் மூலமாக விவசாயிகள் கரும்பு, நெல், வாழை, மஞ்சள், தென்னை உள்ளிட்ட பயிர்களை நடவு செய்து பாசனம் பெற்று வருகின்றனர்.
இதனிடையே, கீழ்பவானி கால்வாயில் முதல் போக நெல் அறுவடை பணிகள் முடிவுற்று, அந்தந்த பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், அறுவடை செய்த நெல்களை மூட்டையாக மாற்றி பாதுகாப்புடன் விவசாயிகள் வைத்து வருகின்றனர். இந்நிலையில் கீழ்பவானி பாசன கால்வாயை ஒட்டி உள்ள சித்தோடு அருகே பேரோடு பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் அரசின் சார்பில் உரிய பாதுகாப்பின்றி அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்த வெளியில் தரையில் கொட்டியும், மூட்டையாக அடுக்கி வைத்தும் வருகின்றனர்.
இதனால் வெயில், மழை காலங்களில் மூட்டைகள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதால், அரசு மேற்கூரையுடன் கூடிய நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கீழ்பவானி பாசன விவசாயி அன்பரசு கூறுகையில்,"ஒவ்வொரு வருடமும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து அரசாங்கம் திறந்த வெளியில் கொட்டும் போது மழை காலங்களில் நெல் முளைத்து சேதாரமாகிறது. இதனால், நிரந்த கொள்முதல் நிலையம் அமைத்தால் தான் விவசாயிகளுக்கு பயனாக இருக்கும் என்று கூறினார்".