ஆழியாரில் இருந்து நீர் வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
🎬 Watch Now: Feature Video
Published : Jan 30, 2024, 3:16 PM IST
கோயம்புத்தூர்: ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத் திட்டத்தில் புதிய ஆயக்கட்டு பகுதிக்கு 21 நாட்களுக்கு 672 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க வேண்டும், நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டக்குழுவிடம் வாட்டார் பட்ஜெட் அளிக்க வேண்டும், பகிர்மானங்களுக்கு முறையான நீர் பங்கீடு செய்வதில் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் (ஜன.28) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் கூறியதாவது, “கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 44 ஆயிரத்து 350 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில் கடந்த காலங்களில் குறைந்தபட்சம் 75 நாட்களும், அதிகபட்சம் 90 நாட்களும் பாசனம் நடைபெற்று வந்தது.
கடந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தால், பிஏபி திட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பை கருத்தில் கொண்டு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற 26 நாட்கள் தண்ணீர் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு பயிர்களுக்கு ஒரு நனைப்பு நடைபெற்றது. அதன் பிறகு பருவமழை ஓரளவு கை கொடுத்ததின் காரணமாக, பிஏபி திட்ட அணைகளில் ஓரளவு நீர் இருப்பு உயர்ந்தவுடன் இரண்டாம் சுற்றுக்கு பாசன நீர் திறப்பது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டி அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
அதன் பின் இரு முறை சந்தித்து பேசியும் எங்களது கோரிக்கையின் படி நீர் வழங்க முடியாது எனவும், 15 நாள் மட்டுமே நீர் வழங்க முடியும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு குறைந்தபட்சம் 21 நாட்களில் 672 மில்லியன் கனஅடிக்கு குறைவில்லாமல் நீர் வழங்கினால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என்பதால், தற்போது பாசன சபை தலைவர்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்.
அடுத்த ஓராண்டு கழித்து தான் எங்களுக்கு பாசன நீர் வரும். ஆகையினால் பயிர்களை காப்பாற்ற 21 நாட்கள் தண்ணீர் தர வலியுறுத்தினோம். ஆனால் அதிகாரிகள் அதனை நிரகாரித்து விட்டனர். 21 நாட்களுக்கு, 672 மில்லியன் கன அடி தண்ணீர் தரும் வரை பிஏபி திட்ட அலுவலகத்தில் காத்திருப்பது என முடிவு செய்து, பிஏபி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.