மேட்டூரில் தண்ணீர் திறக்கவில்லை என்றால் தற்கொலையே தீர்வு.. ஆட்சியரிடம் மனு கொடுத்து விவசாயிகள் வேதனை!
🎬 Watch Now: Feature Video
Published : Jan 30, 2024, 2:36 PM IST
திருவாரூர்: விவசாயத்திற்கு அரசு தண்ணீர் திறக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மேல மருதூர் விவசாயிகள் மனு கொடுத்து வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட மேல மருதூர், தென்பாதி, வடபாதி, கட்டிமேடு, பிராந்தியாங்கரை, தெற்குப்பிடாகை, தாணிக்கோட்டகம் போன்ற பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடைமடை பகுதியான இப்பகுதி பாசனத்திற்குத் தேவையான தண்ணீரை முள்ளி ஆற்றின் மூலம் விவசாயிகள் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் வேண்டி அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி ரவிச்சந்திரன் கூறுகையில், “அரசு ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்தது. அவற்றை நம்பி நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டோம். ஆனால், போதிய மழை மற்றும் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காத காரணத்தால் பயிர்கள் கருகியது. தற்போது மீண்டும் பயிரிட்டுள்ளோம். இது எங்களுடைய வாழ்வாதாரம். இவற்றை நம்பி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சாகுபடி செய்துள்ளோம்.
பயிர்கள் நடவு செய்யப்பட்டு 70 நாட்கள் உள்ள நிலையில், மேட்டூர் அணையில் இருந்து ஒரு முறையாவது அரசு தண்ணீர் திறந்துவிட்டால் மட்டும் விவசாயத்தைப் பாதுகாக்க முடியும். தண்ணீர் திறக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை” என்று வேதனை தெரிவித்தனர்.