திரெளபதி அம்மன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற துரியோதனன் படுகளம்! - Droupadi amman temple - DROUPADI AMMAN TEMPLE
🎬 Watch Now: Feature Video
Published : May 12, 2024, 9:21 PM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயிலில், மகாபாரத அக்னி வசந்த விழா நிகழ்ச்சியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த மகாபாரத அக்னி வசந்த பெருவிழா கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி, மகாபாரத தொடர் சொற்பொழி மற்றும் நாடக நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து, அர்ச்சுனன் தபசு, அம்மன் பாஞ்சாலி தேவி திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, பாண்டவர் அரக்கு மாளிகை, சுபத்திரை திருக்கல்யாணம், கண்ணன் தூது, அரவான் கடபலி, அபிமன்னன் சண்டை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அந்த வகையில், இன்று(மே.12) துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் களிமண்ணால் மிகப் பெரிய அளவில் உருவாக்கப்பட்ட துரியோதனனின் உருவத்தைப் பீமன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கிடையில், அங்குக் கூடி இருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே பாஞ்சாலி தனது கூந்தலை முடிந்து தனது சபதத்தை நிறைவேற்றியதையடுத்து கிராம மக்கள் பஞ்சபாண்டவர்களின் சிலையைத் தூக்கி ஆடி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
பின்னர் கிராம மக்கள் துடைப்பத்தால் தலையில் அடி வாங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதன் மூலம் மாதம் மும்மாரி பெய்யும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும். இதில் பூதமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.