மாவட்ட அளவிலான யோகா போட்டி: திருவிக்ரமாசனத்தில் 6 நிமிடங்கள் நின்று அசத்திய மாணவி! - yogasanam - YOGASANAM
🎬 Watch Now: Feature Video
Published : Aug 5, 2024, 8:12 AM IST
மயிலாடுதுறை: நாகை மற்றும் மயிலாடுதுறை யோகா சங்கம் சார்பாக லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 3 வயது சிறுவர், சிறுமிகள் முதல் 78 வயது முதியவர் வரை 500க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வயது வாரியாக தரம் பிரித்து நடைபெற்ற போட்டியில், 5 யோகாசனங்களை சிறந்த முறையில் செய்து காட்டியவர்களுக்கு சான்றிதழ் உடன் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்கு யோகாசனம் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், 78 வயது முதியவர் முத்தையன் என்பவர் சிரசாசனம், சர்வாங்காசனம், ஹாலாசனம் ஆகியவற்றை சர்வ சாதாரணமாகச் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
இதேபோல் பக்தி பாடல் ஒன்றிற்கு ஏற்றவாறு நடனமாடியவாறு 6 மாணவிகள், விருச்சிகாசனம், கண்டபேருண்டாசனம், பூரண சக்ராசனம், ஹலாசனம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடினமான ஆசனங்களை நடனத்திற்கு ஏற்றவாறு செய்து அசத்தினர்.
இதில் பிரபஞ்ச யோகா அகாடமியின் பத்தாம் வகுப்பு மாணவி தான்யாஸ்ரீ காலினை ஒரே நேர்கோட்டில் மேல்நோக்கி தூக்கி நிறுத்தியவாறு (திருவிக்ரமாசனம்) சுமார் 6 நிமிடங்கள் நின்று சாதனை படைத்தார். இதில், ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள் பலர் சிவன், பதஞ்சலி முனிவர், பிரதமர் மோடி ஆகியோர் போல் வேடமணிந்து, சக்கராசனம், தனுராசனம் உள்ளிட்ட ஆசனங்களைச் செய்து அசத்தினர்.