தருமபுரி ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய காளையார்கள்! - jallikattu
🎬 Watch Now: Feature Video
Published : Mar 5, 2024, 10:18 AM IST
தருமபுரி: தருமபுரி அடுத்த சோகத்தூர் சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு வீர தமிழர் பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியானது நேற்று காலை துவங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.அன்பழகன், எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து தருமபுரி, சேலம்,புதுக்கோட்டை, மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் மல்லுகட்டி அடக்கினர். இதில் தன்னை அடக்க வந்த வீரர்களைக் காளைகள் மிரட்டியதும், திமிலை பிடித்த வீரர்களை தலைகீழாகத் தூக்கி வீசி சில காளைகள் துவம்சம் செய்தன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை காண தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொது மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். இதனையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், அண்டா, மிக்சி, மின்விசிறி, தங்க காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது .