மயிலாடுதுறை வைத்தியநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்! - vaitheeswaran temple therottam

🎬 Watch Now: Feature Video

thumbnail

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம் இன்று (மார்ச் 21) வெகு விமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவகிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருவதாக நம்பப்படுகிறது. இந்த கோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4,448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், பங்குனி மாத பிரமோற்ச்சவ திருவிழா கடந்த மார்ச் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து இவ்விழாவின் 7ஆம் திருநாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர், சுவாமி, அம்பாள், செல்வமுத்து குமாரசுவாமி, அங்காரகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் பஞ்ச மூர்த்திசுவாமிகள் எழுந்தருள, சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு, கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், பேரூராட்சித் தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். 

அதனை அடுத்து, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்தில் தேரினை இழுத்தனர். தொடர்ந்து நான்கு தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு மாட வீதிகளின் வழியாகச் சென்று கோயில் நிலையை அடைந்தது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.