அரசுப் பள்ளி மாணவர்களின் கலர் பலூன் புத்தக வெளியீட்டு விழா; சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!
🎬 Watch Now: Feature Video
Published : Feb 7, 2024, 2:02 PM IST
நாகப்பட்டினம்: அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக குருக்கத்தி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ‘கலர் பலூன்’ என்ற சிறார் இதழை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
இதன்படி, அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளின் கதை, ஓவியம், கவிதை, ஜோக் என முழுக்க, முழுக்க மாணவர்களின் கை வண்ணத்தில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அச்சிட்டு புத்தகம் வெளி வர இருக்கிறது. கீழ்வேளூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற முதல் பதிப்பு வெளியிட்டு விழாவில், புத்தகத்தில் படைப்பாற்றல் செய்த மாணவர்கள் புத்தகத்தை வெளியிட, மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பெற்றுக் கொண்டார்.
பின், புத்தகத்தில் படைப்பாற்றலை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் ஆடல், பாடல், கதைசொல்லல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பால சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மு.முருகேஷ் பங்கேற்று, குழந்தை இலக்கியம் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியருடன் மாணவ, மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் தன்மை, படைப்புத் தன்மையை ஊக்குவிக்க முழுக்க முழுக்க பள்ளி மாணவர்களின் படைப்புகளைக் கொண்டே புத்தகத்தை வெளிக் கொண்டு வந்திருக்கும் முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.