அரியலூர் அடைக்கல அன்னை திருத்தலத்தில் தேர் பவனி கோலாகலம்! - adaikala annai matha temple - ADAIKALA ANNAI MATHA TEMPLE
🎬 Watch Now: Feature Video
Published : Apr 21, 2024, 10:51 PM IST
அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குவது, ஏலாக்குறிச்சி பகுதியில் உள்ள புனித அடைக்கல அன்னை திருத்தலம். இந்தத் திருத்தலத்தில் பழமை வாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சொரூபம் அமையப் பெற்றுள்ளது.
இந்தத் திருத்தலத்தில், 293வது ஆண்டு பெருவிழா கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் சிறப்புத் திருப்பலிகளும், கூட்டுத் திருப்பலிகளும் நடைபெற்று வந்தது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித அடைக்கல அன்னையின் அலங்காரத் தேர்ப் பவனி, பங்குத்தந்தை அதிபர் தங்கசாமி தலைமையில் நடைபெற்றது. புனித அடைக்கல அன்னை வண்ண வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
புனித அடைக்கல அன்னையை வரவேற்கும் வகையில், தேவ தூதர்கள் அடைக்கல அன்னைக்கு மாலையிட்டு வரவேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து, தேர்ப் பவனி ஆலய வளாகத்தைச் சுற்றி வந்து நிறைவடைந்தது. இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.