கோவை பெரியகடை வீதியில் பெண்களிடம் அத்துமீறல்? பொதுமக்களை வற்புறுத்தும் கடை ஊழியர்கள்? - Women Harassed CCTV
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோவை மாநகரில் உள்ள முக்கியமான பகுதிகளில் பெரியகடை வீதியும் ஒன்றாகும். இப்பகுதியில் அதிகமான துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் உள்ளது.
இந்த நிலையில், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களை துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகளில் பணிபுரியும் இளைஞர்கள் பலரும் கட்டாயப்படுத்தி தங்கள் கடைக்கு துணி மற்றும் நகை வாங்க வாருங்கள் என்று கூறுவதாகவும், இதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவிப்பதும் தொடர்கதையாக உள்ளது.
இத்தகைய சூழலில், பொதுமக்களை கட்டாயப்படுத்தி கடைக்கு அழைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், கடந்த ஜூன் மாதம் அப்பகுதியில் உள்ள கடையில் பணிபுரியும் இளைஞர் ஒருவர், அவ்வழியாக நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்துள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த பெண், வழிமறித்த இளைஞரை கேள்வி கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார். பதிலுக்கு அந்த இளைஞரும் அந்த பெண்னை தாக்கியுள்ளார். இவை அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அத்துமீறும் இவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் மற்றும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இது சம்பந்தமாக புகார்கள் எதுவும் கொடுக்கப்படாத நிலையில், சிசிடிவி காட்சிகள் மட்டும் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.