ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா.. சீறிப்பாய்ந்த காளைகள் - உற்சாகமாக கண்டு ரசித்த மக்கள்!
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி சாமுடிவட்டம் பகுதியில், 10ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இது துறை சார்ந்த அதிகாரிகளின் முறையான அனுமதி பெறப்பட்டு, மருத்துவம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் நடைபெற்றது.
இந்த எருது விடும் திருவிழாவில் வாணியம்பாடி ஆம்பூர் நாட்றம்பள்ளி உள்ளிட்ட திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் சுமார் 150க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. மேலும் சாமுடிவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை புரிந்து விழாவைக் கண்டு ரசித்தனர்.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தைக் குறைந்த நேரத்தில் ஓடிக் கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பிளஸ் இரு சக்கர வாகனமும், இரண்டாவது பரிசாக ஹீரோ எச்எப்-100 இருசக்கர வாகனமும், மூன்றாவது பரிசாக ஏழு கிராம் தங்க நாணயம் உள்ளிட்ட சுமார் 50 பரிசுகள் வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கப்பட்டது.