மதுக்கடை மூடியதால் ஆத்திரம்.. சிசிடிவி கேமராவை உடைத்த ராணுவ வீரர்! - armyman arrested tirupathur
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தாதங்குட்டையைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராஜ்குமார் (29). இவர் இந்திய ராணுவத்தில் பஞ்சாபில் அவுல்தராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஒரு மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது, நேற்று இரவு சின்னகந்திலி பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பிற்குச் சென்று மது வாங்கி குடித்ததாகவும், பின்னர் அந்த மதுவை குடித்துவிட்டு மறுபடியும் ஒயின்ஷாப்பிற்குச் சென்றபோது, 10 மணிக்கு மேல் ஆனதால் ஒயின்ஷாப் மூடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை வழக்கம்போல் ஒயின்ஷாப் ஊழியர் கடையை திறக்க வந்த போது, சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து மதுபானக் கடை மேற்பார்வையாளர் உடனடியாக சிசிடிவி காட்சியைக் கைப்பற்றி, இது குறித்து கந்தலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ராணுவ வீரர் ராஜ்குமார் சிசிடிவி கேமராவை உடைத்தது உறுதியானது. இதன் காரணமாக ராணுவ வீரர் ராஜ்குமாரை கந்திலி போலீசார் கைது செய்தது திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.