“வாக்களிக்காமல் அரசை குறை கூறுவது தவறானது”..முதல் முறையாக வாக்களித்த அன்புமணி மகள் சஞ்சுத்ரா! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video


Published : Apr 20, 2024, 7:57 AM IST
விழுப்புரம்: “நல்ல ஆட்சி, நல்ல தலைவர்கள் வரவேண்டும். அப்பா, அம்மா சொல்கிறார்கள் என வாக்களிக்காமல், மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள்? என நீங்களே யோசித்து முடிவெடுங்கள்” என்று முதல் முறையாக வாக்களித்த அன்புமணி ராமதாஸின் மகள் சஞ்சுத்ரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர் ஆகிய தொகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களில் 18 வயது முதல் 19 வயது வரை உள்ள 34,232 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
இதில் முதன்முறையாக வாக்களித்த வாக்காளர்களில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸில் இளைய மகள் சஞ்சுத்ராவும் ஒருவர். அவர் தனது சகோதரிகள் மற்றும் தந்தையுடன் திண்டிவனம் மரகதாம்பிகை அரசு பள்ளியில் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “நான் முதல் முறை வாக்களிக்கும்போது சற்று தயக்கமாக இருந்தது. நான் மாணவி, அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது பின்னாளில் தான் தெரியும். அப்பா, அம்மா சொல்கிறார்கள் என வாக்களிக்காமல் நீங்களே நன்கு யோசித்து முடிவெடுங்கள்.
நல்ல ஆட்சி, நல்ல தலைவர்கள் வரவேண்டும். மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என யோசித்து முடிவெடுங்கள். கல்வி, வேலைவாய்ப்பில் கண்டிப்பாக மாற்றம் வேண்டும். இந்த தேர்தல் நல்ல மாற்றத்தை கொண்டுவரும் என நம்புகிறேன். வாக்களிக்காமல் அரசை குறை கூறுவது தவறானது” என்று தெரிவித்தார்.