சிவன் லிங்கத்தை அலங்கரித்த சூரிய ஒளி.. அரியலூரில் நிகழ்ந்த அரிய நிகழ்வு! - Chola Period Temple In Ariyalur - CHOLA PERIOD TEMPLE IN ARIYALUR
🎬 Watch Now: Feature Video
Published : Apr 20, 2024, 3:32 PM IST
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரிக்கரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 20ஆம் தேதியில் இருந்து 25ஆம் தேதி வரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். இதனால், சூரிய பகவான் சிவனை இந்தத் தலத்தில் வழிபட்டதாகவும் ஒரு ஐதீகம் உள்ளது.
ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சூரிய பகவான் வலம் வந்து ஈசனை வழிபடுவதாக ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர். அதன் அடிப்படையில், ஏப்ரல் 20ஆம் தேதியான இன்று காலை 6:10 மணியில் இருந்து 6:20 மணி வரையில், சுமார் 10 நிமிடங்கள் சூரியனில் இருந்து வெளிப்படும் சூரியக் கதிரானது நேரடியாக லிங்கத்தின் மீது பட்டது.
இந்த அபூர்வ நிகழ்வின்போது, பசுபதீஸ்வரர் லிங்கம் சூரிய ஒளியால் அலங்கரிக்கப்பட்டது போல மிளிர்ந்தது. இந்த அரிய காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயிலுக்கு வந்து சிவனை வழிபட்டுச் சென்றனர். மேலும், இந்த அரிய நிகழ்வானது, இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழலாம் என உள்ளூர் பக்தர்கள் தெரிவித்தனர்.