ஸ்கூல் டீச்சருக்கு 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னாள் மாணவர்கள்.. நெல்லையில் நெகிழ்ச்சி! - teacher 100th birthday - TEACHER 100TH BIRTHDAY
🎬 Watch Now: Feature Video
Published : Jul 13, 2024, 5:53 PM IST
திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்து பகுதியைச் சேர்ந்தவர் கிரேனாப். இவர் 1924ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 100 வயது ஆகிறது. இவர் தனது 19 வயதில் ஆசிரியராக பணி நியமனம் பெற்று திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பணி செய்து வந்துள்ளார். இவரிடம் பலர் பள்ளிப் படிப்பை படித்து உயர் பதவிகளில் உள்ளனர். இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.
40 வருடங்களுக்கு முன்பு கிரேனாப் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது அவரது நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அவரது மகன், பேரன், பேத்திகள் மற்றும் குடும்பத்தினர்கள் ஏற்பாட்டின் பேரில் நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த விழாவில் ஆசிரியராக இருந்த கிரேனாப்பிடம் பாடம் படித்த மாணவ, மாணவிகள் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த தகவலை அறிந்து ஆசிரியரிடம் பள்ளிப் படிப்பை படித்து வெளிநாடுகளில் இருப்பவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆசிரியரின் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நூறு என்ற எழுத்து பொறிக்கப்பட்ட தோரணங்களும், ஆசிரியரின் புகைப்படங்களும் இடம் பெறும் வகையில் அலங்காரப் பொருட்கள் கட்டப்பட்டு இருந்தது. மேலும், 100 என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி பிறந்தநாளை ஆசிரியர் கிரேனாப் மற்றும் அவரது மகன், பேரன், பேத்தி, உறவினர்கள் மற்றும் அவரது மாணவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.