மக்களையே காணாத அமைச்சருக்கு களம் எப்படி தெரியும்? - எல்.முருகன் பேச்சுக்கு அதிமுக நீலகிரி எம்பி வேட்பாளர் பதிலடி - AIADMK Lokesh Tamilselvan - AIADMK LOKESH TAMILSELVAN
🎬 Watch Now: Feature Video
Published : Mar 30, 2024, 9:39 AM IST
ஈரோடு: நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக பொறுப்பாளர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்குப் பின் ஆட்சியைக் காப்பாற்றியவர், அப்போதைய சபாநாயகர் தனபால்.
தற்போது அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். சத்தியமங்கலத்தில் மக்கள் வெள்ளத்தைப் பார்த்துப் பிரமிப்பாக உள்ளது. இந்த மக்கள் எழுச்சியால் மக்களவைத் தேர்தலில் அதிமுக 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். பாஜகவை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி. கடந்த 5 ஆண்டுகளில் திமுக எம்பிகள் 38 பேர் இருந்தும் எந்த வேலையும் செய்யவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் தொகுதி, அதிமுக கோட்டையாக உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி என 3 தலைமுறைகளை பார்த்த செங்கோட்டையன் கல்வி அமைச்சராக இருந்தபோது, லஞ்சம் வாங்காமல் பள்ளி துவங்க அனுமதி வழங்கினார். ஆனால், தற்போது பள்ளிகள் தொடங்குவதற்கு லஞ்சம் கேட்கிறார்கள். இதை பிரச்சாரமாக எடுத்துக்கொண்டு அதிமுக ஒரு பூத்தில் குறைந்தபட்சமாக 350 வாக்குகள் பெற்றுத் தரவேண்டும்" எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், 'நீலகிரி தொகுதியில், தற்போது பதவியில் இருக்கும் 2 அமைச்சர்கள் தான் போட்டியிடுகின்றனர். ஆனால், அவர்கள் இனிமேல் வெற்றி பெற்றுதான் செய்வதாக தெரிவிக்கின்றனர். அமைச்சர் எல்.முருகன் இதுவரை மக்களைச் சந்தித்ததே இல்லை. ஆனால், அதிமுக களத்திலேயே இல்லை என்கிறார். மக்களையே சந்திக்காத அவருக்கு எப்படி களம் தெரியும்?
களத்திற்கு வந்து மக்களிடம் சந்தித்துவிட்டு பிறகு பேச வேண்டும் என்றார். இப்பகுதியில் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் அதிகளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது. அதற்காகவும், விவசாயிகள் - வனவிலங்குகள் இடையேயான மோதலைத் தடுக்கவும் நான் மக்களவையில் குரல் கொடுப்பேன்" எனவும் வாக்குறுதி கொடுத்தார்.
முன்னதாக, நீலகிரி மக்களவைத் தொகுதி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே அதிமுக களத்திலேயே இல்லை என ஊட்டியில் நடந்த பிரச்சாரத்தின் போது, எல்.முருகன் விமர்சித்திருந்தார் (Lokesh Tamilselvan vs L.Murugan) என்பது குறிப்பிடத்தக்கது.