"உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியின் கால் தூசுக்கு வரமாட்டார்" - நடிகர் சரத்குமார் காட்டம்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 15, 2024, 11:45 AM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவனூர், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, மணியக்காரன்பாளையம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் நடிகர் சரத்குமார் கலந்துகொண்டு அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “பத்தாண்டுகள் எந்த ஒரு ஊழலும் அற்ற அப்பழுக்கற்ற ஆட்சியைத் தந்தவர் மோடி. பதவிக்கு வருவதும் அவரே. மோடி, அடுத்த 25 ஆண்டுக்கான திட்டங்களை வகுத்து வைத்துள்ளார். அவரை விமர்சிக்க ஏதுமில்லாமல், அநாகரீகமாக விமர்சித்து வருகிறார்கள். ஒரு அமைச்சரின் மகன் மக்களைப்பார்த்து பெண்கள் எல்லாம் பளபளன்னு இருக்கீங்களே. அதற்கு காரணம் நாங்கள் கொடுத்த 1000 ரூபாய் தானே என்று கேட்கிறார்.
அமைச்சர் பொன்முடி, ஓசி பஸ்சில் செல்கிற உனக்கு இவ்வளவு திமிரா என்கிறார். ஆக, இவர்கள் திட்டங்களை வாக்குகளுக்காக கொடுத்து விட்டு, மக்களை ஏளனம் செய்கிற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். மோடியை 29 பைசா என்று அமைச்சர் உதயநிதி கூறுகிறார். உதயநிதிக்கும், பிரதமர் மோடிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது, உதயநிதி பிரதமர் மோடியின் கால் தூசுக்கு வரமாட்டார்.
தேசத்தின் வளர்ச்சிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். கோயம்புத்தூரில் வேட்பாளராக நிற்கும் அண்ணாமலையை வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுகவினர் பாதி பேர் ஜெயிலில் உள்ளனர். பாதி பேர் பெயிலில் உள்ளனர். அண்ணாமலை புள்ளி விவரங்களுடன் பேசுவதால் அவரைப்பார்த்தால் எதிர்கட்சியினருக்கு பயம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “சரத்குமார் பாஜகவில் தனது கட்சியை இணைத்த பின்பு முதல் முறையாக நானும் அவரும் கோவையில் தான் தேர்தல் பிரச்சாரத்தில் நின்று கொண்டிருக்கிறோம். நல்லவர்கள் தனித்தனியாக இருப்பதை விட, ஒன்றாக இணைந்து செயல்படுவது சிறந்தது என்று அவரது சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து பாஜகவில் இணைந்து கொண்டார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கும் கோயம்புத்தூருக்கும் முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 'பாஜக எனும் பேரழிவு..அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது..அம்பேத்கர் எனும் அறிவாயுதம்' - மு.க.ஸ்டாலின் - Ambedkar Jayanti