நெமிலியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி; ஆடல் பாடலுடன் களைக்கட்டிய பள்ளி..! - scientist abdul hamed
🎬 Watch Now: Feature Video
Published : Feb 19, 2024, 10:31 PM IST
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் 1986-1987ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களின் நான்காம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் இன்று (பிப்.19) நடைபெற்றது. இதில் அவர்களுடன் பயின்றவரும், சந்திராயன்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானியுமான அப்துல் ஹமீதுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாழ்நாள் சாதனையாளர்கள், சமூக சேவகர்கள் என பல்வேறு பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டு விழா மற்றும் நண்பர்களின் சங்கம விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 1986-87 பேட்ச் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்தி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் நெமிலியில் உள்ள நண்டு பிராண்ட் உரிமையாளர் கடிகாசலம் நெமிலி பாலா, பீடத்தின் பீடாதிபதி எழில்மணி, டாக்டர் நடராஜன் மருத்துவமனை மற்றும் டாக்டர் நடராஜன் மேல்நிலைப்பள்ளி நிறுவனரான நடராஜன், தொழிலதிபர் பசுபதி உள்ளிட்டோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவித்தனர். அதைத்தொடர்ந்து, விஞ்ஞானி அப்துல் ஹமீதுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதனையடுத்து தங்களுக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களை கௌரவப்படுத்தி அவர்களிடம் ஆசி பெற்றனர். ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களையும் தங்கள் பள்ளி காலங்களில் நிகழ்ந்த நினைவுகளையும் நினைவு கூர்ந்து பேசி மகிழ்ந்தனர். பல்வேறு துறைகளில் உள்ள இவர்கள், அவரவர்கள் துறை சார்ந்த அனுபவங்களையும் அறிவுரைகளையும் வழங்கினர். அதைத்தொடர்ந்து, தன்னுடன் பயின்ற நண்பர்கள் மற்றும் தோழிகளைக் கண்ட மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் உணவுகளைப் பரிமாறிக் கொண்டு ஊட்டி விட்டு மகிழ்ந்தனர். இறுதியாக அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.