பாரீஸ்: டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜர்பைஜான் நாட்டிலிருந்து தனி விமானம் மூலம் சென்று கொண்டு இருந்த போது, பொர்காட் விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பாட்டர்.
கைது நடவடிக்கை ஏன்? டெலிகிராம் செயலியில் மாடரேட்டர் எனப்படும் கண்காணிக்கும் நபர்கள் இல்லை. இது அந்த செயலியின் வாயிலாக குற்றச் செயல்கள் எவ்வித தடையுமின்றி நடைபெற வழிவகுத்ததாக பிரான்ஸ் போலீசார் கருதுகின்றனர். மேலும், அந்த குற்றச் செயல்களை தடுக்க துரோவ் போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாகவும் பிரான்ஸ் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
டெலிகிராம் செயலியில் ஒரு குழுவில் அதிகபட்சம் 2 லட்சம் பேர் வரை இருக்கலாம் என்பதால், இந்தச் செயலி தவறான தகவல்கள் வேகமாக பரவுவதை எளிதாக்குகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இது தொடர்பான வழக்கிற்கு பாவெல் துரோவ் உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என அந்நாட்டுக் காவல்துறையினர் கூறி வருகின்றனர்.
மேலும், இணையதளங்களில் சிறார்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு ஆஃப்மின் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த ஆஃப்மின் அமைப்பு ஏற்கனவே பாவெல் துரோவ்வுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்த நிலையில், இந்த கைது நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.பிரான்ஸ் அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தனது கடுமையான எதிர்வினையை பதிவு செய்துள்ளது.
யார் இந்த பாவெல் துரோவ்? பிளே ஸ்டோரின் தரவுகளின் படி, உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள டெலிகிராம் செயலியை உருவாக்கியவர் தான் பாவெல் துரேவ். குறிப்பாக உக்ரைன், ரஷ்யா மற்றும் சோவியத் யூனியன் போன்ற நாடுகளில் செல்வாக்குமிக்க செயலியாக உள்ளது.
காரணம், அமெரிக்க செயலிகளுக்கு மாற்றாக டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுகிறது. மேலும், பாவெல் துரோவ் சொத்து மதிப்பு 15.5 பில்லியன் டாலராக இருக்கும் என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. பாவெல் துரோவ், கடந்த 2013ஆம் ஆண்டு ரஷ்யாவில் தனது சகோதரருடன் இணைந்து டெலிகிராம் செயலியை உருவாக்கினார். அதன் பின்னர், ரஷ்ய அரசுடன் ஏற்பட்ட முரண் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அனில் அம்பானி இனிமே ஷேர் மார்க்கெட் பக்கம் போகவே கூடாது'; செபியின் அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம்?