கீவ், உக்ரைன்: ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே போர் உச்சக்கட்டத்தில் நடந்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏராளமான ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இவற்றை நடுவானிலேயே முறியடிக்க அமெரிக்காவால் வழங்கப்பட்ட F16 ரக போர் விமானங்களை உக்ரைன் பயன்படுத்தியது. இருப்பினும் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகள் ஏவுகணைகளின் தாக்குதலுக்கு இலக்காகின.
ரஷ்யாவிலிருக்கும் ஆயுத ஏவுதளங்களின் மீது புகுந்து தாக்குதல் நடத்த மேற்கு நாடுகளின் அனுமதியை உக்ரைன் அதிபர் விளாதிமிர் செலன்ஸ்க்கி (Volodymyr Zelenskyy) கேட்டிருக்கிறார். இந்நிலையில் ஏவுகணைகளை இடைமறிக்க F16 விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவரையிலும் அமெரிக்காவிடமிருந்து ஆறு F16 விமானங்களை மட்டுமே உக்ரைன் பெற்றிருக்கும் நிலையில் குறைந்தது 100 விமானங்களாவது வேண்டும் என உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் உலகின் அதிநவீன போர்விமானமான F16 ஐ கையாளும் திறன் படைத்த விமானிகள் உக்ரைனிடம் ஒருசிலரே உள்ளனர். இந்த விமானிகளில் ஒருவர் வியாழக் கிழமை நடைபெற்ற தாக்குதலின் போது கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் இந்த விமானம் ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்கானதா? அல்லது பைலட்டின் தவறால் விபத்தில் சிக்கியதா என்பது குறித்த விளக்கம் இதுவரை வழங்கப்படவில்லை.
F16 விமானங்களின் தனித்துவம்: 1974 ம் ஆண்டு முதன்முறையாக F16 ரக விமானங்கள் அமெரிக்க விமானப்படையில் தங்களின் சேவையைத் தொடங்கின. அதாவது 50 ஆண்டுகளை இந்த விமானங்கள் நிறைவு செய்துள்ளன. இருந்த போதும் இன்றைய தேதியிலும் உலகின் அதிநவீன போர்விமானங்களில் ஒன்றாக F16 கருதப்பட காரணம், அவ்வப்போது அதில் செய்யப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் தான். வெளிப்புறத் தோற்றத்தில் பெரிதாக மாற்றம் இல்லாவிட்டாலும், அதிநவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் இன்றும் முன்னணியில் இருக்கிறது F16.
பல தசாப்தங்களாக போர்முனைகளில் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் இந்த விமானம் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகள் போர் விமானங்களை வடிவமைத்திருந்தாலும், ரியலான போர்முனைகளில் அதிகநேரம் பறந்த திறனை நிரூபித்ததில் F16 விமானங்களுக்கு ஈடு இணை இல்லை.
அதிநவீன ரேடார்: விமானம் பறக்கும் போது எதிர்வரும் ஆபத்துக்களை கண்காணிப்பதற்காக 5வது தலைமுறை ரேடார் ஆன APG-83 பொருத்தப்பட்டுள்ளது. இது எதிர்வரும் ஏவுகணை அல்லது விமானங்களின் தூரம், திறன் போன்றவற்றை துல்லியமாக கண்காணித்து விமானியை உஷார்ப்படுத்துவதோடு, டிஜிட்டல் மேப்பாக தயார் செய்து விமானிக்கு தரும்.
போர்க்களம் குறித்த முன்னுணர்வு (Enhanced Battlespace Awareness): ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது விமானியால் எதையும் கண்ணால் பார்த்து தாக்குதல் நடத்த முடியாது. இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் இலக்குகளை கண்காணித்து கற்பனை வரைபடமாக விமானிக்கு காண்பிக்கும். விமானி அணிந்திருக்கும் ஹல்மெட்டிலேயே இதற்கான டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும்.
விமானிகளுக்கு பாதுகாப்பு: இன்றைய தேதியில் உலகில் உள்ள எலைட் மனிதர்களில் விமானிகளும் அடங்குவர். அறிவுத்திறன் (IQ) , முடிவெடுக்கும் திறன் போன்றவற்றில் தன்னிகரற்றவர்களாக தயாராகியிருக்கும் இவர்களைப் பாதுகாப்பதற்கு தனி முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. F16 விமான தயாரிப்பு நிறுவனமான Lockheed Martin மூலம் தயாரிக்கப்பட்டுள்ள Automatic Ground Collision Avoidance System (Auto GCAS) விமானியின் கட்டுப்பாட்டை இழக்கும் போது, விமானம் பாதுகாப்பாக தரையிறங்க உதவுகிறது. இந்த தொழில்நுட்பம் கடந்த 2014ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்த பின்னர் விமானங்கள் வெடித்துச் சிதறுவது 26 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக Lockheed Martin நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறியுள்ளது.
ஆயுதம் ஏந்திய கழுகு(Unmatched Weapon Integration): Lockheed Martin இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதன் படி F16 விமானங்கள் 180 வகையான ஆயுதங்களின் 3,300 காரேஜ்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. அதாவது 3,300 முறை இவற்றால் இலக்குகளை தாக்க முடியும். இன்றைய தேதியில் உலகில் உள்ள போர் விமானங்களில் வேறு எதற்கும் இந்த திறன் இல்லை என Lockheed Martin கூறுகிறது.
இத்தகைய உலகின் அதிநவீன விமானத்தை இழந்தது மட்டுமின்றி , இதனை இயக்கும் பயிற்சி பெற்ற விமானியையும் உக்ரைன் இழந்திருப்பது உலக நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது. இன்னும் 100 F16 விமானங்களை உக்ரைன் கேட்டிருக்கும் நிலையில் இந்த விமான விபத்து உக்ரைன் போர்முனையில் கவனம் ஈர்க்கிறது.