ஹைதராபாத்: இந்தியாவில் உள்ள கார் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் தற்போதைய காலகட்டத்தில் மிகவும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதனை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்காக வரி சலுகைகள் மற்றும் மானியங்கள் போன்ற பல்வேறு ஊக்கத்தொகைகளை வழங்குகிறது.
அந்த வகையில், டாடா மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் வாகனங்களில் நெக்ஸான் EV (Nexon EV) மற்றும் கர்வ் EV (Curvv EV) ஆகிய இரண்டு மாடல்களும் தனித்துவமான அம்சங்களைப் பெற்றுள்ளன. ஆனால், இரண்டு மாடலுக்கும் இடையில் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன என்பதை இங்கு காணலாம்.
பேட்டரி: மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான மின் செலவு, பெட்ரோல் அல்லது டீசல் கார்களுக்கான எரிபொருள் செலவை விட குறைவாகும். அந்த வகையில், நெக்ஸான் EV காரின் குறைந்த விலை வேரியண்ட் 30 kWh பேட்டரி பவரைக் கொண்டுள்ளது. அதேநேரம், கர்வ் EV காரின் குறைந்த விலை வேரியண்ட் 40 kWh பேட்டரி பவரைக் கொண்டுள்ளது. சார்ஜிங் செலவுகள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு யூனிட்டிற்கு ரூ.4.80 முதல் ரூ.12 வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.
பேட்டரி வாரண்டி: மின்சார வாகனங்கள் பொதுவாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட குறைந்த பராமரிப்பு செலவுகளைக் கொண்டுள்ளன. அந்த வகையில், டாடா மோட்டார்ஸினுடைய நெக்ஸான் EV மற்றும் கர்வ் EV ஆகிய இரண்டு மாடல் கார்களுக்கும் பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,60,000 கி.மீ. வரை நிலையான வாரண்டியை டாடா நிறுவனம் வழங்குகிறது.
சார்ஜ் கெப்பாசிட்டி: நெக்ஸான் EV ஒரு சார்ஜில் 312 கி.மீ. வரை ரேஞ்ச் வழங்குகிறது. கர்வ் EV கார் 400 கி.மீ. வரை ரேஞ்சை வழங்குகிறது. இரண்டு மாடல்களும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புகளுடன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒருவருடத்திற்கான செலவு: பொதுவாகவே மின்சார கார்களுக்கான காப்பீட்டு பிரீமியங்கள் அவற்றின் அதிக விலை மற்றும் பேட்டரிகள் போன்ற விலையுயர்ந்த பாகங்களின் காரணமாக மாறுபடுகிறது. இருப்பினும், சில மாநிலங்கள் காப்பீட்டுச் செலவுகளை குறைக்கக்கூடிய ஊக்கத்தொகைகளை வழங்குகின்றன. அந்த வகையில், நெக்ஸான் EV மற்றும் கர்வ் EV ஆகிய இரண்டு மாடல் கார்களுக்கும் தோராயமாக ஒரு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை காப்பீட்டுச் செலவு இருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதனைத் தவிர்த்து மற்ற செலவுகளை பொறுத்தவரையில், நெக்ஸான் EV காரின் 30kWh பேட்டரிக்கான சார்ஜிங் செலவு ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலும் செலவாகும். அதுவே, கர்வ் EV காரின் 40kWh பேட்டரிக்கான சார்ஜிங் செலவு ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.14,500 முதல் ரூ.20,000 வரையிலும் செலவாகும். அதேநேரம், பராமரிப்புச் செலவுகளை பொறுத்தவரையில், இரண்டு மாடல்களுக்குமே ஒரு வருடத்திற்கு சுமார் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் செலவாகும் என்று கூறப்படுகிறது.
விலை: டாடா மோட்டார்ஸ் அதன் பல்வேறு வகையான மின்சார வாகனங்களை விற்பனை செய்து, இந்திய மின்சார வாகனச் சந்தையில் முன்னணியில் உள்ளது. நெக்ஸான் EV ஆரம்பத்தில் மிகவும் மலிவானதாக இருந்தாலும், கர்வ் EV மேம்பட்ட அம்சங்கள் மற்றும் நீண்ட ரேஞ்ச் ஆகியவை இருக்கின்றன. அதற்கு ஏற்றார்போல வாகனத்தின் விலையும் அதிகமாக உள்ளது. அந்த வகையில், நெக்ஸான் EV காரின் விலை ரூ.14 லட்சம் என விற்பனையாகி வருகிறது. புதிய மாடலான கர்வ் EV காரின் விலை ரூ.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: புதிய கார் வாங்க இது தான் சரியான நேரம்... அதிரடி ஆஃபர்கள்! விலைக்குறைப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு!