இணைய உலகம் ஆர்பரித்து வரும் சூழலில், அது தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றன. இதைத் தடுக்க 'இணையவெளிரோந்து' குழு, தமிழ்நாட்டின் இணையவழி குற்றதடுப்புப்பிரிவு தலைமையகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய அதிர்ச்சியூட்டும் சைபர் குற்றத்தை இந்த குழு கண்டுபிடித்துள்ளது.
தேசிய சைபர்கிரைம் அறிக்கையிடல் போர்டல் (cybercrime.gov.in) போன்ற போலியான இணையதளத்தை அடையாளம் கண்டு கட்டுப்படுத்தியுள்ளனர். இந்த இணையதளத்தில் "உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது" என்று அரசின் சைபர் போர்டலில் இருந்து தகவல் தெரிவிப்பது போல் காண்பிக்கப்பட்டு, மேலும் அதில் "கார்டு விவரங்கள், காலாவதி தேதி மற்றும் CVV" போன்ற முக்கியமான நிதித்தகவலைப் பதிவு செய்து பணம் பறிக்க வழிவகை செய்ய்யப்பட்டிருந்தது என்று தமிழ்நாடு சைபர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இணையவெளிரோந்து என்றால் என்ன?
இணையவெளிரோந்து என்பது இணையத்தைப் பயன்படுத்தி இணையகுற்றங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான ஒருவழியாகப் பார்க்கப்படுகிறது. இணையத்தில் தீங்கு விளைவிக்கும் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையம் சார்ந்த தகவல்களை திரட்டுவதே இதன் நோக்கமாகும்.
இணையவெளிரோந்து வாயிலாக இணையகுற்றங்களை அவற்றின் ஆரம்பகட்டத்திலேயே தடுக்கலாம். இதனால் ஒருபாதுகாப்பான இணையவெளியை உறுதிசெய்யமுடியும் என்கிறது இணையவழி குற்றதடுப்புப்பிரிவு. சைபர் குற்றங்களின் அச்சுறுத்தலைத் தடுக்கவும், தீவிர நடவடிக்கை எடுக்கவும் இந்த குழு உதவுகிறது.
சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் இணைய மோசடி நடவடிக்கைகளை கண்காணிக்க இணையவெளிரோந்து குழுவை தமிழ்நாடு இணையவழி குற்றதடுப்புபிரிவு உருவாக்கியுள்ளது.
ஆபாச பட அபராதம்?
இக்குழுவால் அடையாளம் காணப்பட்ட https//infaulwnmx.cyou/ எனும் இணையதளத்தை, கிளிக் செய்யும்போது, அது முழுத்திரையில் வருவதற்கான உள்ளமைந்த அமைப்பைப் பெற்றிருந்தது. அதில் 'நீங்கள் சில ஆபாச இணையதளங்களைப் பார்த்ததால் உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது' என்ற செய்தியோடு IPC பிரிவுகளையும் உள்ளிட்டு, இதற்காக ரூ.30,290 அபராதம் செலுத்த வேண்டும் என திரையில் காண்பித்து பொதுமக்களை ஏமாற்ற இணைய மோசடிக்காரர்கள் முற்பட்டுள்ளனர்.
இந்த அபராதத்தொகையை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே செலுத்த முடியும் என்ற செய்தியோடு கிரெடிட்கார்டு விவரங்களையும் உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைத்துள்ளனர். இந்த கிரெடிட்கார்டு விவரங்கள் கொண்டு அடுத்தடுத்த சைபர் குற்றங்களை அவர்கள் தொடர்கின்றனர்.
இக்குழு அறிக்கையின் அடிப்படையில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2021 தகவல்தொழில் நுட்பவிதிகளின்படி, இந்த மோசடி இணையதளத்திற்கு சேவை வழங்கிய சீனாவில் உள்ள இணைய பதிவாளருக்கு தெரிவிக்கப்பட்டு சட்டவிரோத இணையதளம் உடனடியாக அகற்றப்பட்டது. இந்நிகழ்வு URLகளின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இல்லையெனில் குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளை ஏற்படுத்தும் என்ற வாதத்தை முன்வைக்கின்றது சைபர் காவல்துறை.
டிரெண்டிங் மோசடி:
இந்திய தபால்துறையில் இருந்து வந்ததாகக் கூறி மற்றொரு மோசடி தற்போது நிலவி வருகிறது. "உங்கள் பார்சலை எங்களால் டெலிவரி செய்ய முடியவில்லை. மேலும் டெலிவரி செய்ய மீண்டும் முயற்சிக்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க என்று குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படுகிறது.
இதனை கிளிக் செய்யும் பொழுது பார்ஸலை திரும்ப எடுத்துவருவதற்கான கட்டணமாக (Re-attempt fee) ரூ.25 கோரப்படுகிறது. இதுவும் கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, போலி எஸ்.எம்.எஸ், இணையதளங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியமானதாகும்.
சைபர் பாதுகாப்புக்கான ஆலோசனை:
தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையால் இணையவெளி ரோந்து மற்றும் போலி இணையதளம் முடக்கப்பட்டது.https://t.co/GBXd2slSJh#cybercrime #FakeAccounts #ScamAlert #cyberawareness #Dial1930 #TamilNaduPolice #tnpoliceoffl pic.twitter.com/3H6WbrqQZH
— Tamil Nadu Police (@tnpoliceoffl) October 16, 2024
இணையத்தள URL முகவரியை (லிங்க்) சரிபார்க்கவும்: மோசடிசெய்பவர்கள் பெரும்பாலும் அரசு இணையதளத்தைப் போலவே போலியான இணையதளத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் சிறியவேறுபாடுகள் இருக்கும். அதனை கவனமுடன் பார்க்க வேண்டும். ‘PUMA’ செருப்புக்கு பதிலாக 'POMA' எனும் போலி நிறுவன காலணிகளைப் பார்த்திருக்கிறோம் அல்லவா! அதுபோல் தான். இணையத்திலும் போலி இணைப்புகள் (URL Link) உலா வருகின்றன.
HTTPS: சட்டப்பூர்வமான இணையதளங்கள் HTTPS என்பதை பயன்படுத்துகின்றன. HTTPS என்பது பயனர்தரவு பாதுகாப்பானது மற்றும் இணையதளத்தின் உரிமை சரிபார்க்கப்பட்டது என்பதை உறுதி செய்கிறது.
எழுத்துப்பிழைகளைக் கவனியுங்கள்: போலி இணையதளங்களில் பெரும்பாலும் எழுத்துப்பிழைகள் இருக்கும். அரசாங்க இணையதளங்கள் எப்போதும் gov.in என்று முடிவடைவதால், டொமைன் பெயரைக் (Domain Name) கவனமாகப் பார்க்க வேண்டும்.
பாப்-அப்களில் எச்சரிக்கையாக இருங்கள்: எந்த இணையதளத்தையும் அணுகும் போது. பாப்- அப்களை கவனமாகப் பார்த்து, தேவைப்பட்டால் மட்டும் அவற்றை அனுமதிக்கவும்.
விளம்பரங்களைக் கிளிக் செய்ய வேண்டாம்: இணையதளங்களில் காட்டப்படும் விளம்பரங்கள், முறையற்ற ஆதாரங்களில் இருந்து இருக்கலாம். அத்தகைய விளம்பரங்களை கிளிக் செய்ய வேண்டாம்.
சிந்தியுங்கள்: கிரெடிட்கார்டு எண், CVV போன்ற முக்கியமான நிதித்தகவலை ஒரு இணையதளத்தில் உள்ளிடுவதற்கு முன், எப்போதும் பலமுறை யோசியுங்கள்.
நீங்கள் இது போன்ற மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர்கிரைம் துறையின், 1930 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து சம்பவம் குறித்து புகாரளிக்கவும். கூடுதலாக அவர்களது இணையதளத்திலும் புகாரைப்பதிவு செய்வது சிறந்ததாக இருக்கும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.