ஹைதராபாத்: செயற்கை நுண்ணறிவு என்னும் AI தொழில்நுட்பம் (AI Technology) 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒபன் AI தொழில்நுட்பமான (Open AI Technology) சாட்ஜிபிடியின் (ChatGPT) அறிமுகம் அனைவரையும் வியக்க வைத்தது. தொடர்ந்து, அதற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பினால் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் AI தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில், கணினித் துறையில் தொடங்கி தற்போது மருத்துவம் வரை AI பயன்பாடு அதிகரித்துள்ளது.
அந்த வகையில், 2027ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் AI தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தில் இருந்து 6.5 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், AI சந்தை 25 முதல் 35 சதவீதமாக வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிற என நாஸ்காமுடன் இணைந்து டெலாய்ட் நடத்திய ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவின் AI வல்லுநர்களுக்கான தேவை 12.5 லட்சத்துக்கும் அதிகமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெலாய்ட் தெற்காசியாவின் தொழில்நுட்பம் மற்றும் உருமாற்றத்தின் தலைவர் சதீஷ் கோபாலய்யா, "2030ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அதிநவீன தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலக அளவில் இந்தியா அதிகார மையமாக மாறும் நிலை உள்ளது.
இருப்பினும், இதனை பயன்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் திறமையின் தரத்தை நோக்கி மாற வேண்டும். தற்போதுள்ள பணியாளர்களை மீண்டும் திறமையாக்குவதன் மூலமும், வலுவான அரசு, கல்வித்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்பால் புதிய திறமைகளை வளர்ப்பதன் மூலமும், AI உந்துதல் கண்டுபிடிப்புகளை வழிநடத்த தயாராக உள்ள நிபுணர்களின் நிலையான திறமையை நாங்கள் உறுதிசெய்ய முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல நாஸ்காமின் மூத்த தலைவரும், தலைமை மூலோபாய அதிகாரியுமான சங்கீதா குப்தா கூறுகையில், "AI தொழில்நுட்பம் இனி ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் செயல்படாது, அனைத்து தொழில்களிலும் முழுவதுமாக ஊடுருவி, உலக அளவில் வணிகங்களை மாற்றும். தொழில்துறை, கல்வித்துறை மற்றும் அரசு ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம் இந்தியாவின் தொழில்நுட்பத் துறையானது AI நிபுணத்துவத்திற்காக அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், உலகளாவிய AI புரட்சிக்கு வழிவகுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆட்டோமேட்டிக் நகராக மாறப்போகும் சீனாவின் வுஹான் நகர்.. ஆதிக்கம் பெறும் ரோபோ டாக்ஸிகள்!