கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போன்கள், உலகளவில் உள்ள பிரீமியம் பயனர்கள் விரும்பும் ஸ்மார்ட்போனாக உள்ளது. இந்த நிலையில், இந்தோநேசியா அரசு, கூகுள் பிக்சல் போன்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. உள்நாட்டின் உற்பத்தி கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யாமல், இதுவரை கூகுள் பிக்சல் போன்கள் விற்பனை செய்யப்பட்டுவந்ததாக தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்பிறகு, இந்த ஸ்மார்ட்போனை விற்பனை செய்தால் அது குற்றமாகக் கருதப்படும் என அரசு எச்சரித்துள்ளது. சமீபத்தில், ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இதுபோன்ற தடையை இந்தோநேசிய அரசாங்கம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தோநேசியாவில் பிக்சல் போன்கள் தடைக்கான காரணம் என்ன?
இந்தோநேசியா, பொதுவாக உள்நாட்டு உற்பத்தி கட்டுபாடுகளைக் கொண்ட நாடாக இருக்கிறது. அதாவது, இங்கு விற்பனை செய்யும் வெளிநாட்டுத் தயாரிப்புகளில் 40% உள்நாட்டு உதிரிபாகங்கள் பயன்படுத்த வேண்டும். கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் இந்தத் தரத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்பது தான் தடைக்கான காரணம் என அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், பிக்சல் போன்களை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, சரியான வரிக் கட்டணங்களை செலுத்தினால், உள்நாட்டு மக்கள் தொடர்ந்து பிக்சல் போன்களைப் பயன்படுத்தலாம் எனவும் அரசு கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கூகுள் நிறுவனம் எந்த பதிலையும் வெளிப்படுத்தவில்லை.
இதையும் படிங்க |
ஐபோன்களுக்கு தடை ஏன்?
ஆப்பிள் நிறுவனம் இந்தோநேசியாவில் முதலீட்டு செய்வதாக அளித்த வாக்குறுதிகளை மீறியதால், அதன் ஐபோன் 16 மற்றும் பிற புதிய மாடல்களுக்கு அரசு தடை விதிக்கப்பட்டது. அதாவது, ஆப்பிள் நிறுவனம் 1.71 டிரில்லியன் ரூபியா (109 மில்லியன் டாலர்) முதலீடு செய்யும் என உறுதியளித்திருக்கிறது.
அதில் நிறுவனம் 1.48 டிரில்லியன் ரூபியா (95 மில்லியன் டாலர்) மட்டுமே முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 230 பில்லியன் ரூபியா (14.75 மில்லியன் டாலர்) குறைவான முதலீட்டை மேற்கொண்டதால், அரசுக்கு மதிப்பீடு இழப்பு ஏற்படும் என்பதால் ஆப்பிள் புதிய போன்களுக்கு இந்தோநேசியா அரசு தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.