சென்னை: 1940 முதல் 1950-களில் ஆண் விளையாட்டு வீரர்களின் கோட்டையாக இருந்தது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள். அன்று அவர்களை பார்த்து ஒரு பெண் சவால் விடுகிறாள் "என்னை தோற்கடித்து விட்டால் அந்த ஆணை நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று"அவருக்கு அந்த துணிச்சல் வந்த காலகட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளை பெண்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கை தட்டுவதோடு முடிந்து விடும். அதையும் தாண்டி சென்றால் வீரர்களைத் திருமணம் செய்து, அவர்களுக்கான சேவையைச் செய்வது மட்டுமே பெண்களின் வேலை என்றே கருதப்பட்டது.
இப்படியான சூழலில்தான் மல்யுத்த போட்டிகளில் ஆண்களுக்கு எதிராகக் களத்தில் இறங்க ஒரு பெண் தயாரானாள். அவளை வெகு சாதாரணமாக நினைத்து கேலி செய்த ஆண் மல்யுத்த வீரர்களும், பின் தங்கிய மனப்பான்மையோடு இருந்த சமூகமும் 1954-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி கதிகலங்கி நின்றது. ஆம் அன்றுதான் பிரபல மல்யுத்த வீரரான பாபா பஹல்வானை வெறும் 1 நிமிடம் 34 வினாடிகளில் தோற்கடித்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றார் இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனையான ஹமிதா பானு.
அவரின் சாதனை ஒன்றும் மிக எளிதாகக் கிடைத்துவிடவில்லை என பல எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பெண் சிங்கத்தை எதிர்க்க யாருக்கு இங்கே துணிச்சல் இருக்கிறது என, உருது பெண்ணிய எழுத்தாளர் குர்ரதுலைன் ஹைதர் எழுதி இருக்கிறார்.
பல ஆண் வீரர்கள் அவளது சாதனைகளையும், உருவத்தையும் கேலி செய்திருக்கிறார்கள். பல போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாத வகையில் தடைகளும், எதிர்ப்புகளும் இருந்திருக்கிறது. சமூகமும் அவரின் சாதனைகளைக் கேலி செய்திருக்கிறது. அதே நேரம் இந்திய அளவில் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற அடிப்படையில் அவருக்கே உரித்தான ரசிகர்களும் இருந்திருக்கிறார்கள்.
அவரின் தினசரி உணவுப் பழக்கம் முதல் வாழ்வியல் நடைமுறை என அனைத்தும் அன்று செய்தியாகின. 108 கிலோ எடையும் 5 அடி 3 அங்குலம் உயரம் மற்றும் உடல்வாகு கொண்ட ஹமிதா பானு, தினசரி உணவில் 5.6 லிட்டர் பால், 2.8 லிட்டர் சூப், 1.8 லிட்டர் பழச்சாறு, ஒரு முழு கோழி, கிட்டத்தட்ட 1 கிலோ மட்டன் மற்றும் பாதாம் பருப்பு, அரை கிலோ வெண்ணெய், 6 முட்டைகள், இரண்டு பெரிய ரொட்டிகள் மற்றும் இரண்டு தட்டு பிரியாணி ஆகியவை இருக்கும் எனவும், ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் உறங்கி தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்வார் எனவும் அன்றைய பிரபல பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் பிறந்த இவரின் குடும்பத்தாரும் மல்யுத்த வீரர்கள் எனக்கூறப்படுகிறது. தனது வாழ்நாளில் சுமார் 300 போட்டிகளுக்கு மேல் பங்கேற்று வெற்றி வாகை சூடி, உலக அளவில் அங்கீகாரம் பெற்ற ஹமிதா பானுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துச் சரியான புரிதல்கள் இல்லை. ஆனால் மிகச் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார் அந்த அசாத்திய வீராங்கனை ஹமிதா பானு என்பது மட்டும் சில எழுத்தாளர்களின் குறிப்புகள் மூலம் தெரிய வருகிறது.
பிற்போக்கு சிந்தனை மிக்க சமூகத்தின் முன் அவர் அன்று எதிர்த்துப் போராடி, ஆண்களுக்கு இணையாக தன் வீரத்தை பிரகடணப்படுத்தியதே பெரும் சாதனைதான். இன்று அவரை நினைவு கூறும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டிருப்பது இந்தியப் பெண் விளையாட்டு வீரர்களுக்கே பெருமை சேர்த்திருக்கிறது. இந்த டூடுளையும் பெங்களூருவைச் சேர்ந்த பெண் கலைஞர் திவ்யா நேகியாதான் உருவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிகாரப்பூர்வமாக கிராண்ட் மாஸ்டர்.. வைரலாகும் தமிழக வீராங்கனை வைஷாலியின் எக்ஸ் பதிவு! - Chess Player Vaishali