சென்னை: கடல் ஆய்வுகளில் இந்தியா மேற்கொண்டுள்ள புதிய திட்டங்கள், இதனால் காலநிலை மாற்றங்களை விரைவாக அறிந்துகொள்வது எப்படி, புவி வெப்பமடைதலின் தாக்கத்தினால் பனிமலைகள் உருகும் நிலை என்ன என்பது குறித்த பலத் தகவல்களை ஈடிவி பாரத் உடன் நியாட் (NIOT) ஆய்வாளர்கள் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில், தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகம் (NIOT) ஆர்டிக் திட்டத்தின் ஆய்வாளர்கள் குழு பொறுப்பு விஞ்ஞானி அருள் முத்தையா, தாங்கள் மேற்கொள்ளும் திட்டங்கள், அதன் சிறப்புகள், கிடைத்த அங்கீகாரங்கள் குறித்து நம்மிடம் பிரத்யேகத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடல் ஆய்வில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாக முனைவர். பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் கூறியபடி, 'மிஷன் மௌசம்' எனும் புதிய திட்டத்தின் கீழ், இந்தியாவின் வானிலை கணிப்புகளை மேம்படுத்தும் நோக்குடன் நடுகடலில் பல்வேறு ஆய்வுகள் நடைபெறுகின்றன என்றார். இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின் பங்கும் பெரியளவில் இருக்கும் என்று கூறினார்.
ஆர்டிக் கடலின் ஆழம் வரை இந்தியாவின் ஆய்வு:
NIOT ஆர்டிக் திட்டத்தின் ஆய்வாளர்கள் முழு பொறுப்பு விஞ்ஞானி அருள் முத்தையா சிலத் தகவல்களைக் குறிப்பிட்டார். "துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NATIONAL CENTRE FOR POLAR AND OCEAN RESEARCH) அண்டார்டிக், ஆர்டிக், இமயமலை ஆகிய 3 துருவப் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்."
"முன்னாள் அமைச்சர் கபில் சிபில் பொறுப்பு வகித்த காலமான 2008ஆம் ஆண்டு முதல் ஹிம்மாதிரி ஆராய்ச்சி மையம் ஆர்டிக் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் வாயிலாக NIOT, கடலுக்கு அடியில் தரவுகளைத் தொடர்ந்து சேகரிக்க செயல்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புதிய 10 சென்சார்கள் அடங்கிய டேட்டா பாய் மிதவையை, ஆர்டிக் கடலின் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்திவிட்டு திரும்பி வந்தோம்." என்று தெரிவித்தார்.
ஆர்டிக் ஆய்வின் நவீன தொழில்நுட்ப பயன்பாடுகள்:
ஆர்டிக் கடலில் நீடித்த மூரிங் அமைப்புகளை பொருத்துவதில் பெரிய சவால்கள் இருந்ததாக ஆய்வாளர் அருள்முத்தையா குறிப்பிட்டார். சென்சார் கருவிகளை வடிவமைக்கும் பொழுது, அந்தக் கடலின் குளிர்ச்சியான மற்றும் திடீரென்று மாறும் சூழலுக்குப் பொருத்தமாக இருப்பது மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. குறிப்பாக, ஆர்டிக் பகுதிகளில் குளிர்காலத்தில் 24 மணி நேரமும் இருள் இருக்கும், இதனால் சூரிய ஒளி இல்லாமல் பேட்டரி சார்ஜ் செய்வது சாத்தியமில்லை. இதனால், கருவியின் மின்சார தேவைகளை குறைத்து வடிவமைத்தோம் என்றார்.
இதில் பல சவால்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். 'டேட்டாபாய்' மிதவையை நிலை நிறுத்துவதற்கு போடப்படும் எடையை அங்கேயே விட்டு விட்டு வர முடியாது. அங்கு கீழே நிலை நிறுத்துவதற்கான தொழில்நுட்பம் தான் மூரிங் எனப்படுகிறது. மூரிங் உதவியால் தான் ‘டேட்டா பாயால்’ நிலையாக நிற்க முடிகிறது. மூரிங் 2 ஆண்டுகளுக்கு பின்னர் எடுக்கும் போது, சென்சார் எதுவும் பாதிப்பு ஏற்படாமல் மீட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மூரிங் தொழில்நுட்பம்:
2014 முதல், கடலுக்கு அடியில் மூரிங் அமைப்புகளை பொருத்தியுள்ளோம். மிதவைகள் மற்றும் சென்சார்களை ஆர்டிக் பகுதிக்கு கொண்டு செல்லும் போது, அவற்றை -7 டிகிரி செல்சியஸ் பனியில் கூட செயல்படும் வகையில் தயாரித்துள்ளோம்.
மேலும், மிதவை நிலைநிறுத்தும் பிகான் சுவிட்ச் வைக்கப்பட்டுள்ளது. இதனால், மூரிங் அமைப்பு பாதிப்படைந்தாலோ அல்லது தண்ணீரின் மேற்பரப்புக்கு வரும்பொழுதோ, தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் கிடைக்கும். இதனை நியாட் 24 மணி நேரமும் கண்காணிக்கும்.
வானிலை மாற்றங்கள் குறித்த ஆய்வுகள்:
இந்தியாவில் உள்ள வானிலை மாற்றத்திற்கும், ஆர்டிக் கடலில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை அருள்முத்தையா கூறினார். நார்வே பகுதியின் துருவத்தில் நிலவும் தட்பவெப்பநிலைக்கும், இந்தியாவில் உள்ள தட்பவெட்ப நிலைக்கும் இடையில் இருக்கும் தொடர்பை கண்டறிவதற்கு 20ஆண்டுகளுக்கு மேலானத் தரவுகள் தேவைப்படும் என்றார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆர்டிக் பகுதியில் சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து, குளிர்காலங்களில் கூட பனிக் கட்டிகள் கரைவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த தரவுகள் புவி வெப்பமாதல், கடல் வெப்பநிலையின் மேம்பாடு ஆகியவற்றை குறித்த அடிப்படையான ஆய்வுகளுக்கு உதவுகின்றன. ஆர்டிக் பகுதியில் இரண்டு மலைகளுக்கு இடையே இருக்கும் நீரில் இந்த பாய்கள் ‘buoy’ நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளியே இருந்து வரும் நீரினால் கடலில் உள்ளப் பனிகட்டிகள் உருகுகிறதா என்பதையும் கணிக்க முடியும் என்கிறார் ஆய்வாளர் அருள் முத்தையா.
அதே நேரத்தில், இந்திய கடலின் வெப்பநிலை மேலே அதிகமாகவும், உள்ளே செல்லும் போது குளிர்ச்சியாகவும் இருக்கும். ஆர்டிக் பகுதியில் இதற்கு முற்றிலும் மாறாக மேலே குளிர்ச்சியாகவும், கீழே செல்லும் போது வெப்பமாகவும் இருக்கும். இதை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் விருதுகள்:
இந்தியாவின் ஆர்டிக் ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது. SIOS அமைப்பு மற்றும் நார்வே, இத்தாலி, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் இந்திய ஆராய்ச்சிக்கு உதவுகின்றன. மேலும், நார்வே நிறுவனங்களும் இதுபோன்ற ஆய்வுகளுக்கு உதவியாக உள்ளன.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அருள்முத்தையா தலைமையில் இந்தியாவின் ஆய்வாளர்கள் கேசவகுமார், முத்துக்குமார், ரகுராமன் ஆகியோர் ஆர்டிக் பகுதியில் சென்று, மிதவைகளை பொருத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வந்தனர். இந்த சாதனைகள் காரணமாக, ஆர்டிக் கடலில் மூரிங் அமைப்புகளை வெற்றிகரமாக அமைத்ததற்காக இந்திய குடியரசுத் தலைவர் விருது வழங்கி பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: