கலிபோர்னியா: டெக் நிறுவனங்கள் தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்பும், மறு தரப்பில் பெரும் ஆதரவும் கிடைத்த ‘ஏஐ பாதுகாப்பு மசோதா’ (AI Safety Bill) கலிபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம் (California Governor Gavin Newsom) நிறுத்தி வைத்துள்ளார். அமெரிக்காவில் வரம்பற்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தங்களுக்கு ஏற்புடையதல்ல என்று கடும் நெருக்கடிகளை கொடுத்து ஓபன் ஏஐ (Open AI), கூகுள் (Google), மெட்டா (Meta) போன்ற நிறுவனங்கள் மசோதாவை எதிர்த்தன.
This is a tough call and will make some people upset, but, all things considered, I think California should probably pass the SB 1047 AI safety bill.
— Elon Musk (@elonmusk) August 26, 2024
For over 20 years, I have been an advocate for AI regulation, just as we regulate any product/technology that is a potential risk…
இதற்கிடையில், சட்டத்திற்கு ஆதரவாக உலகப் பணக்காரரான டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) கருத்துத் தெரிவித்திருந்தார். அதில், வரையறுக்கப்படாத எந்த தொழில்நுட்பமும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், நெருகடிகளை தற்காலத்தில் தவிர்க்க கலிபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம் மசோதாவை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநர் நியூசம் ஏன் மசோதாவை நிறுத்திவைத்தார்?
AI நிறுவனங்கள் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது, அவை நவீனமயமாவதில் சட்டங்கள் தடையாக இருக்கும் என்று நியூசம் கூறினார். மேலும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கும்பட்சத்தில், ஏஐ வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டு, நிறுவனங்கள் மாநிலத்திலிருந்து வெளியேறக்கூடிய சூழல் ஏற்படும் என்றார்.
இதில், சாதாரண AI பயன்பாடுகள் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த AI முறைகளை ஒரே விதமாகக் கையாள்வது தவறானது என தான் நம்புவதாகத் தெரிவித்தார். மசோதாவிற்கு தடை விதித்தது சரியான முடிவு என மெட்டா நிறுவனத்தின் ஏஐ ஆய்வாளர் யான் லீகன்(Yann LeCun) நன்றி தெரிவித்து தனது எக்ஸ் (formerly Twitter) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Thank you Governor @GavinNewsom for vetoing SB-1047.
— Yann LeCun (@ylecun) September 29, 2024
The open source AI community as grateful for your sensible decision.https://t.co/7OnMT29F8J
மசோதா முன்மொழிந்த ஏஐ பாதுகாப்புத் திட்டங்கள்?
இந்த மசோதாவை உருவாக்கிய செனட்டர் ஸ்காட் வீனர், சில முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்மொழிந்தார்:
- மேம்பட்ட AI மாடல்களுக்கு பாதுகாப்பு சோதனை: சக்திவாய்ந்த AI முறைகளை பயன்படுத்துவதற்கு முன்னர், அவற்றை பாதுகாப்பானவையாக உருவாக்க வேண்டும்.
- கில் ஸ்விட்ச் (Kill Switch): AI பயன்பாடுகள் தவறான முறையில் செல்லும்போதோ, மக்களை அதிகளவு பாதிக்கக்கூடியதாக மாறும்போதோ, அதை நிறுத்துவதற்கு “கில் ஸ்விட்ச்” அவசியம்.
- அதிகாரபூர்வ ஒழுங்கு (Official Oversight): மிகவும் சக்திவாய்ந்த AI தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்கள் அரசாங்க கண்காணிப்பில் செயல்பட வேண்டும்.
ஆனால், ஆளுநர் நியூசம் இந்த மசோதா தேவைக்கேற்ப திட்டமிடப்படவில்லை எனக் கருதினார். உதாரணமாக, AI உயர்-ஆபத்து சூழ்நிலையில் பயன்படுத்தப்படுகிறதா அல்லது அதில் நுட்பமான தரவுகள் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை மசோதா கருத்தில் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, அனைத்து AI முறைகள் மீதும், மிகக் கடுமையான விதிகளைச் சுமத்துவது ஏற்புடையதாக இல்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க |
அடுத்தது என்ன?
என்னதான் மசோதாவை நிறுத்தினாலும், AI பாதுகாப்பு அவசியமானது என கலிபோர்னியா மாநில ஆளுநர் கேவின் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக சில செயற்கை நுண்ணறிவு (AI) நிபுணர்களுடன் இணைந்து AI ஆபத்துகளிலிருந்து மக்களை பாதுகாக்க தேவையான முறைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில், தவறான தகவல்கள் மற்றும் "டீப் ஃபேக்ஸ்" (செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்படும் போலி படங்கள், வீடியோக்கள் அல்லது ஆடியோ) போன்றவற்றை தடுக்க அவர் 17 சட்டங்களுக்கு ஆதரவளித்து கையெப்பமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் முக்கியத்துவம் என்ன?
உலகின் மிகப்பெரிய AI நிறுவனங்களின் தலைமையகமாக, ஐக்கிய அமெரிக்காவின் ஒரு அங்கமான கலிபோர்னியா மாநிலம் செயல்பட்டு வருகிறது. இந்த இடம் தான் OpenAI (ChatGPT உருவாக்கியவர்கள்), கூகுள், மெட்டா (Meta) போன்ற நிறுவனங்களின் இல்லமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, கலிபோர்னியாவில் AI தொழில்நுட்பத்திற்கு விதிக்கப்படும் எவ்விதச் சட்டமும் உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
எதிர்ப்பாளர் கருத்து என்ன?
OpenAI, கூகுள், மெட்டா போன்ற பெரிய டெக் நிறுவனங்கள் மசோதாவுக்கு எதிராகத் தங்களது கருத்தை தெரிவித்தது. AI இன்னும் தொடக்க நிலையிலேயே இருப்பதால், இப்போது கட்டுப்படுத்துவது நவீன வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்று வாதிட்டது. நிபுணர் வெய் சன் (Wei Sun) போன்ற சில தொழில்நுட்ப வல்லுநர்கள், எப்போதாவது AI தவறாக பயன்படுத்தப்படும் என்று கூறி, தொழில்நுட்பத்தைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, அதன் மோசமான பயன்பாடுகளுக்காக விதிகளை உருவாக்குவது சிறந்ததாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
மசோதா உருவாக்கிய செனட்டர் ஸ்காட் வீனர், இந்த மசோதா நிராகரிக்கப்பட்டதால், AI நிறுவனங்கள் எந்தவித கட்டுப்பாடுகளின்றி, நிதானமற்ற முறையில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேற்கொள்ளும் என்று கவலை தெரிவித்துள்ளார். மேலும், தேசிய அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க மேற்கொண்ட முயற்சிகள் தற்போது சீர்குலைந்துள்ளதாகவும், நிறுவனங்களுக்கு எந்தப் பெரிய கட்டுப்பாடுகளும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.