உலகின் மிக மலிவு விலை கார் என மக்களால் எதிர்பார்க்கப்பட்ட டாடா நானோவின் (Tata Nano) கதை, பல திருப்பங்களைக் கொண்டது. மேற்கு வங்கத்தின் சிங்கூரில் தொடங்கிய இந்தக் கனவு, அரசியல் எதிர்ப்புகளால் குஜராத் மாநிலம் 'சனந்த்'-இல் நனவாகியது. இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி என்பது உங்களுக்குத் தெரியுமா?
நரேந்திர மோடி (Narendra Modi), ரத்தன் டாடாவுக்கு (Ratan Tata) அனுப்பிய "வரவேற்கிறோம்" (Welcome) என்ற ஒற்றை வார்த்தை அடங்கிய குறுஞ்செய்தி (SMS) தான், டாடா நானோவை சாத்தியமாக்கியது. இதை, ரத்தன் டாடாவும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
நிலப் பிரச்சினை:
2006-ஆம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலை அமைக்க அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சாரியா தலைமையிலான அரசு 1,053 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. தொழிற்சாலை அமைக்கும் இடத்தை மக்களிடம் இருந்து அரசு கையகப்படுத்தி, டாடா நிறுவனத்திற்கு ஒதுக்கியது.
ஆனால், விவசாய நிலத்தில் கார் தொழிற்சாலையை டாடா தொடங்குகிறது என பிரச்சினை கிளம்பியது. அந்த சூழலில், அப்போது எதிர்கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பலகட்ட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில், முக்கியமாக அவர் 20 நாள்களுக்கு மேலாக மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் டாடா நிறுவனத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது.
மோடியின் 'வெல்கம்' மெசேஜ்:
போராட்டங்கள் தீவிரமடைய, 75% முடியும் தருவாயில் இருந்த தொழிற்சாலை கட்டுமானத்தை அப்படியே விட்டுவிட்டு, தாங்கள் மேற்குவங்கத்தை விட்டு வெளியேறுவதாக ரத்தன் டாடா அறிவித்தார். அந்த நேரத்தில் தான், நரேந்திர மோடி, ரத்தன் டாடாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி குஜராத்துக்கு வரவேற்றார்.
டாடாவின் இந்த முடிவு, குஜராத் மாநிலத்திற்கு ஒரு வளர்ச்சிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. 2010-ஆம் ஆண்டு, சனந்தில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் டாடா நானோ தொழிற்சாலை தொடங்கப்பட்டது. "ஒரு ரூபாய் மதிப்புள்ள குறுஞ்செய்தி என்ன செய்யும் என்பதை இப்போது பார்க்கலாம்" என்று மோடி அப்போது கூறியிருந்தார்.
மகிழ்ச்சி நிறைந்த சோகம்:
டாடாவும் குஜராத் அரசின் ஆதரவைப் பாராட்டி, "அமைதியும் நல்லிணக்கமும் நிலவும் இடத்தில் தொழிற்சாலை அமைக்க விரும்பினோம். குஜராத் அரசு எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது," என்று கூறினார்.
இருப்பினும், பல்வேறு காரணங்களால் டாடா நானோ கார் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 2018-ஆம் ஆண்டு, நானோ கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆனால், ஒரு மெசேஜ் வாயிலாக தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என்பதை ரத்தன் டாடா - மோடி இணைந்து நிகழ்த்தி காட்டியது வரலாற்றுச் சுவடுகளில் பொறிக்கப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வாகும்.
இதையும் படிங்க |
நானோ தோற்றது ஏன்?
"ஒரு லட்ச ரூபாய்க்குள் ஒரு கார்" என்ற இலக்குடன் தொடங்கியது நானோ திட்டம். இதற்காக, பல புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. எடை குறைவான பொருள்கள், சிறிய எஞ்சின் போன்றவை இதில் அடங்கும்.
நானோ காரின் குறைந்த விலை, அதன் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியது. முக்கியமாக, நானோ, "மலிவான கார்" என்ற பிம்பத்தை உருவாக்கியது. இது, பல வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தவறியது. மக்கள், சற்று விலை கொடுத்தாவது, சிறந்த தரம் மற்றும் அம்சங்களைக் கொண்ட கார்களை வாங்க விரும்பினர். ஒரு வேளை 'மலிவான கார்' என்பதை விட்டு, 'பட்ஜெட் கார்' என்று விளம்பரப்படுத்தி இருந்தால், டாடா நானோ வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கும் என்று வல்லுநர்கள் கருதினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.