வாகன பிரியர்கள் 10-15 ஆண்டுகளாக தங்களின் பாட்னராக வைத்திருந்த பழைய பைக்கை பயன்படுத்த முடியாமல், அதை காயலான் கடையில் சொர்ப்ப விலைக்கு விற்க வேண்டும் என்ற முடிவில் இருப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
புதிய பைக்கை சுலப மாதத் தவணையில் வாங்கலாம் என்றெல்லாம் எண்ணம் வைத்திருப்பீர்கள். வேண்டாம்; இப்போது உங்கள் பழைய பைக்கையே மின்சார பைக்-காக மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பம் (EV bike conversion) உள்ளது. இதனால் இப்போது கடன் வாங்கி புதிய பைக் வாங்க வேண்டியதில்லை.
புதிய தொழில்நுட்பம்:
ஏனென்றால், இப்போது ரெட்ரோஃபிட் என்ற புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் பழைய வாகனத்தை மின்சார வாகனமாக மாற்ற வந்துள்ளது. தற்போது, இது நகரங்களில் பெரும் பிரபலமடைந்து வருகிறது. அதிகமான மக்கள் தங்கள் பழைய பைக்கை விற்பதற்கு பதிலாக மின்சார பைக்காக மாற்ற முன்வந்துள்ளனர்.
ஒன்றிய அரசும் ரெட்ரோஃபிட் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதால், நம் பழைய வாகனங்களுக்கு எலெக்ட்ரிக் பைக்காக மாற்றிக் கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மாற்றியமைக்கப்பட்ட பைக்குகள் இன்னும் 10 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இயங்க வாய்ப்புள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரெட்ரோஃபிட் என்றால் என்ன?
ரெட்ரோஃபிட் என்பது தற்போதுள்ள பெட்ரோல் அல்லது டீசல் எரிபொருளில் பயன்படுத்தப்படும் வாகனங்களை, பேட்டரியில் இயங்கும் வாகனமாக மாற்றுவதாகும். வாகனத்தின் எஞ்சின் மற்றும் பிற தொடர்புடைய பாகங்கள் மறுசீரமைப்பு செய்து மாற்றப்படுகின்றன. இந்த முறை ரெட்ரோஃபிட் என்று அழைக்கப்படுகிறது.
சரியான நிறுவனத்தை எப்படி தேர்வுசெய்வது?
பழைய பைக்குகளை பேட்டரியில் இயங்கும் பைக்குகளாக மாற்றுவதற்கு முன், ரெட்ரோஃபிட் செய்ய சிறந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஆனால், அத்தகைய நிறுவனத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற குழப்பம் வேண்டாம்; அதற்கும் ஒரு வழி இருக்கிறது. முதலில், நீங்கள் ரெட்ரோஃபிட் செய்ய விரும்பும் நிறுவனத்தை ஆட்டோமொபைல் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) அடையாளம் கண்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்.
ஏனென்றால், உங்கள் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகள் தரமானதாக இருக்க வேண்டும். எனவே, அத்தகைய பேட்டரிகளுக்கு ARAI அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். ARAI ஆல் அடையாளம் காணப்பட்ட நிறுவன பேட்டரிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் உத்தரவாதமும் கிடைக்கின்றன. இவை அல்லாமல் குறைந்த விலை என்று தரமற்ற பேட்டரிகளை வாங்கினால், அது வெடிக்கும் அபாயம் உள்ளது என்பதையும் மறந்துவிட வேண்டாம். ARAI சான்றளிக்கப்பட்ட நிறுவனத்தின் பேட்டரிகள் மட்டுமே தர உத்தரவாதத்தைக் கொண்டிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
இதையும் படிங்க |
பெட்ரோல் பைக்கை மின்சார பைக்காக எப்படி மாற்றுவது?
பழைய பைக்கை மின்சார பைக்காக மாற்றுவதற்கு ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை செலவாகும். இதற்காக ஒரு கிட் மற்றும் பேட்டரி தேவைப்படும். எதிர்காலத்தில் இதன் விலை இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியின் திறனைப் பொறுத்து பைக்கின் மைலேஜ் நிர்ணயம் செய்யப்படும். பழைய பைக்குகளை 50 முதல் 150 கிலோமீட்டர் வரை செலுத்தும் திறன் மிக்கதாக நம்மால் மாற்ற இயலும். 100 முதல் 150 கிலோமீட்டர் திறன் கொண்ட பேட்டரிக்கு ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை செலவாகும்.
பழைய பைக்குகளை காயலான் கடைக்கு அனுப்பாமல், ரெட்ரோஃபிட் முறையில் இப்படி மாற்றினால், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு பைக்கை சாலைகளில் நீங்கள் ஓட்டிச்செல்லலாம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.