சென்னை: பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்குப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டதற்கு விளக்கம் கேட்டு, சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் உணவு குறித்து ரிவ்யூ வீடியோ எடுத்து, அதனை யூடியூபில் பதிவிட்டு பிரபலமானவர் இர்பான். இவருக்கு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கும் முன் திருமணமான நிலையில், மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து குடும்பத்தில் நடக்கும் சில சம்பவங்களை வீடியோவாக எடுத்து, அதனை இணையத்தில் பதிவிட்டு வந்தார். இவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில், யூடியூபர் இர்பான் அவரது மனைவியுடன் இணைந்து சில நாட்களுக்கு முன் துபாய் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவமனையில் தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்து, அதனை தன் யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் பெற்றோர் தங்களது குழந்தையின் பாலினத்தை அவர்கள் பிறப்பதற்கு முன்னர் அறிவிப்பற்கு 'ஜெண்டர் ரிவில்' எனும் பெயரில் விழாவாக நடத்தி, குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது வழக்கம்.
இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மருத்துவமனைகளில் குழந்தையின் பாலினம் குறித்து பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறிவந்தனர். ஆனால், அவ்வாறு கூறுவதால் பெண் சிசுக்கொலை அதிகமானதையடுத்து, குழந்தையின் பாலினம் குறித்து பெற்றோரிடம் கூறக்கூடாது என உத்தரவிட்டு, அதனை தடை செய்ததோடு, அவ்வாறு கூறுவது சட்டப்படி குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், யூடியூபர் இர்பான் மற்றும் அவரது மனைவி தற்போது தங்களது குழந்தையின் பாலினத்தை யூடியூபில் வீடியோவாக வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ அதிக அளவில் பாகிரப்பட்டதையடுத்து, சுகாதாரத்துறை சார்பாக இது குறித்து இர்பானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும், காவல்துறையிலும் அவர் மீது புகார் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.