சேலம்: சேலம் மாநகரில் உள்ள 4 ரோடு, அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள், கூலித் தொழிலாளர்களை குறிவைத்து போதை மருந்து விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரிக்கு புகார் வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், செவ்வாய்பேட்டை காவல்துறையினர் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு 4 ரோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்குள்ளான படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்களிடம் 30 மாத்திரை அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவர்கள் சந்தைப்பேட்டை, பெரியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (22), தட்சணாமூர்த்தி (24), அர்ஜுனன் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் அவர்களிடம் இருந்த மாத்திரைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட 3 பேரும் கூலித் தொழிலாளர்கள். அவர்கள், அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். குறிப்பாக, ஒரு மாத்திரையை ரூ.250-க்கு விற்பனை செய்துள்ளனர்.
மேலும், இவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு இந்த மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மாத்திரைகளை வாங்க முடியாது என கூறப்படும் நிலையில், இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரித்துள்ளனர்.
அப்போது, சேலம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதியான சுப்பிரமணி (55) என்பவரிடம், குறைந்த விலைக்கு மாத்திரைகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் மற்ற போதைப்பொருட்களை விற்பனை செய்துள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கைது செயப்பட்டவர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள், கல்லூரி மாணவ - மாணவிகள், கூலித் தொழிலாளர்கள் உட்பட பலருக்கு போதைக்காக மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்த மருந்து விற்பனை பிரதிநிதி சுப்பிரமணி என்பவரையும் போலீசார் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்தனர். ஏற்கனவே, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது போதை மாத்திரை புழக்கம் இருப்பதாக கூறப்படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோயில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்.. கொலையா? தற்கொலையா? என விசாரணை..