புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன், இவருடைய உறவினர் சரவணன். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள காட்டிற்கு, தங்களுடைய நாட்டுத் துப்பாக்கியை எடுத்து கொண்டு வேட்டைக்காக சென்றுள்ளனர்.
அப்போது துப்பாக்கியில் விரிசல் ஏற்பட்டிருந்தது இருவருக்கும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அருகிலிருந்த வெல்டிங் பட்டறைக்குச் சென்று அங்கு வெல்டிங் அடித்து விட்டு செல்லலாம் என்று நினைத்து சென்றுள்ளனர். அங்கு வெல்டிங் செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக நாட்டுத் துப்பாக்கி வெடித்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே அதில் பால்ராஸ் குண்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் துப்பாக்கியில் இருந்து சீறி பாய்ந்து வந்த பால்ரஸ் குண்டுகள் லட்சுமணன் வயிற்றுப் பகுதியில் பாய்ந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமணனை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லட்சுமணன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து லட்சுமணனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்தை திருச்சி சரக டிஐஜி மனோகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் உயிரிழந்த லட்சுமணனின் உறவினரான சரவணனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உரிய அனுமதி இல்லாமல் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களுக்கு நாட்டு துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/24-07-2024/22032918_wha.jpg)
இதையும் படிங்க: MSME முனைவோருக்கு மத்திய பட்ஜெட் எந்த அளவு சாதகம்? வல்லுநர்கள் கருத்து!