நீலகிரி: கூடலூர் அருகே, ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளின் அருகே உலா வருவதும், மக்களை தாக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.
யானைகளில் நடமாட்டத்தால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், நீலகிரி ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய சூண்டி பகுதியில் நேற்று (மார்ச் 14) இரவு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை, அப்பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (24) என்பவரை தாக்கியுள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி, யானை தாக்கியதில் பாதிக்கப்பட்ட பிரசாந்த்தை மீட்டு, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால், யானை தாக்கியதில் படுகாயமடைந்த பிரசாந்த, சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காட்டு யானை தாக்கியதில் 24 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா மீது பாய்ந்த போக்சோ வழக்கு.. கர்நாடகாவில் பரபரப்பு!