கன்னியாகுமரி: குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெராபின் பிளவர் குயின்(55). இவர் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, அண்ணா பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவருடைய கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளார்.
அதனை அடுத்து, இச்சம்பவம் குறித்து கோட்டார் காவல் நிலையத்தில் ஜெராபின் பிளவர் குயின் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளையனை பிடிக்க காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில், துணை ஆய்வாளர் சரவணகுமார், காவலர்கள் விஜயகுமார், சிவக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைபற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் ஆளூர் வரை சென்றது தெரியவந்துள்ளது. பின்னர், அந்த மர்ம நபர் தான் அணிந்திருந்த ஹெல்மட்டை கழற்றியுள்ளார்.
அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, பல்வேறு கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வரும் கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்த சிவா(28) என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவாவின் தந்தை சிவசங்கர்(55) என்பவருக்கும் இந்த நகை பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.
அகப்பட்ட பலநாள் திருடர்கள்: அதனைத் தொடர்ந்து தந்தை, மகன் இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில், இருவரும் மீனாட்சிபுரம் ஆசாரிமார் தெருவில் உள்ள ஒரு அடகு கடையில், கொள்ளை அடித்த நகையை அடகு வைக்க வந்திருப்பதாக நேற்று (புதன்கிழமை) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனை அடுத்து, அடகு கடைக்கு விரைந்து சென்ற போலீசார், சிவா மற்றும் அவரது சிவசங்கரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெராபின் பிளவர் குயினிடம் கொள்ளையடித்த நகையை கைப்பற்றினர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், ராஜாக்கமங்கலம் பகுதியில் சங்கரமணியம் என்பவரது வீட்டில் LED டிவி , ஹோம் தியேட்டர், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைத் திருடியதும், நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ராமநாதன் என்பவரது வீட்டிலும் திருடியதாகக் கூறியது போலீசாரை அதிர்ச்சியை அடைய செய்தது.
மேலும், கைது செய்யப்பட்ட இருவர் மீது நாகர்கோவிலில் வடசேரி, நேசமணி நகர், ராஜாக்கமங்கலம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் நகை பறிப்பு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், குறிப்பாக தந்தை சிவசங்கர் மீது மட்டும் 60 வழக்குகள் உள்ளதும், மகன் சிவா மீது 35 வழக்குகள் மேல் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளன.
இதையும் படிங்க: பைக் மீது லாரி மோதி விபத்து; திருவள்ளூரில் ஒருவர் உயிரிழப்பு!