தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி போலீசாருக்கு காயல்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் சேக் அப்துல் காதர் தலைமையில் உதவி ஆய்வாளர் அர்ச்சுனன், தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ்குமார் உட்பட காவலர்கள் ஆறுமுகநேரி அருகே உள்ள பேயன்விளை அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் 3 நபர்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது மூன்று பேரும் தப்பி ஓடிய நிலையில், போலீசார் தூரத்திச் சென்று இரண்டு பேரை மட்டும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், காயல்பட்டினம் தைக்காபுரத்தைச் சேர்ந்த ஹசன் பன்னா, பரிமார் தெருவைச் செருநூர்தீன் என்பது தெரிய வந்தது. இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில் இருவர்கள் கொடுத்த தகவலின் பேரில், பெரிய நெசவு தெருவைச் சேர்ந்த ஜெய்னுல் ஆப்திம் என்பவரது வீட்டில் தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ்குமார் உட்பட மூன்று பேர் சோதனை மேற்கொண்டார். அப்போது ஜெய்னுல் ஆப்திம் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதில், நான் மாவட்ட ஆட்சியரிடம் சென்று புகார் அளிப்பேன். எனது வீட்டில் சோதனை நடத்த தகவல் கொடுத்த நபரை சொல்லுங்கள்; இல்லை என்றால் விஷம் குடித்து விட்டு உங்கள் பெயரை எழுதி வைத்து விடுவேன் என போலீசாரை மிரட்டினா.
உடனே தனிப்படை போலீசார் எங்களுக்கு உயர் அதிகாரிகள் மூலம் தகவல் வந்தது என்று கூறினர். அப்போது ஆத்திரமடைந்த ஜெய்னுல் ஆப்திம் தனிப்படை போலீசாரிடம் கஞ்சா விற்கும் இருவர் பெயரை கூறி இவர்களை பிடிக்க உங்களால் முடியவில்லை என ஆத்திரத்தோடு கூறி வீட்டில் இருந்த கத்தியே எடுத்து கழுத்தில் வைத்துக்கொண்டு கழுத்தை அறுத்து கொள்வதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும், ஜெய்னுல் ஆப்திம் நான் உங்களை எங்கு சந்திக்க வேண்டுமோ அங்கு சந்தித்து கொள்கிறேன் என எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து போலீசார் அங்கிருந்து கிளம்பினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து ஆறுமுகநேரி போலீசார் ஜெய்னுல் ஆப்திம் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், ஜெய்னுல் ஆப்திம் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “செந்தில் பாலாஜி இருப்பதால் சவுக்கு சங்கருக்கு தேவைகள் மறுப்பு”.. புழல் சிறை குறித்து வழக்கறிஞர் தகவல்! - savukku shankar Case