தஞ்சாவூர்: திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் பட்டுவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாய கூலி தொழிலாளி ஆவார். இவரது மனைவி தங்கமணி (43).
இவர்களுக்கு திருமண நாளான நேற்று (நவ.9) கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பிறகு வீட்டுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை முதல் திருவோணம் பகுதியில் சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
பிறகு வெயில் தொடங்கிய பின் துணிகளை துவைத்து வெயிலில் காய வைப்பதற்காக வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் மற்றொரு சிறிய கம்பியை கட்டி வைத்துள்ளனர். அதில் துணிகளை காய போட்ட தங்கமணி பிறகு காய போட்ட துணிகளை எடுக்க சென்றுள்ளார்.
இதையும் படிங்க: 'அமரன்' திரைப்பட எதிர்ப்பு; 'தமிழ்நாடு வன்முறைக்காடாகி விடும்' - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
அப்போது வீட்டில் உள்ள இரும்பு கம்பியின் மூலம் கொடி கம்பி மீது மின்சாரம் பாய்ந்து தங்கமணி மீது மின்சாரம் தாக்கியது. இதில் மூக்கில் ரத்தத்துடன் சுருண்டு விழுந்து உயிருக்கு போராடிய தங்கமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கமணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீசார் தங்கமணி உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது சம்பந்தமாக திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரசாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் தாக்கி இறந்த தங்கமணிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில், திருமண நாளில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்