சென்னை: சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சென்னையிலிருந்து குடும்பத்துடன் சுற்றுலா வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த குழந்தைகள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாவட்டம், கொடுங்கையூரை சேர்ந்தவர் சகாயராஜ் (38), இவர் தங்க நகைகள் செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் 11 பேர் கொண்ட தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஏப்.29) காலை சென்னையிலிருந்து புறப்பட்ட குடும்பத்தினர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
தொடர்ந்து, இன்று (ஏப்.30) காலை திருச்செந்தூரில் இருந்து டெம்போ வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்வதற்காகப் புறப்பட்டுள்ளனர். இதையடுத்து வாகனம் கல்லாமொழி, பள்ளிவாசல் நுழைவாயில் எதிரே சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஆளில்லாமல் வந்த மற்றொரு வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது, இதில் டெம்போ வேன் உருண்டு ஓடியது.
இதில், டெம்போவில் பயணித்த சகாயராஜின் மனைவி சுமதி (37) படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, கல்லாமொழி அனல் நிலையத்திலிருந்த ஆம்புலன்ஸ் மூலம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.
இந்த விபத்தில் சகாயராஜின் தந்தை ராமு (63), தாயார் மேரி (60), மகன்கள் தன்ஷிக் (14), மனோஜ் குமார் (13), ரமேஷ் என்பவரது மகள் திவ்யதர்ஷினி (8), குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த டெம்போ வேன் ஓட்டுநர் விஜயசங்கர் (38) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதில், மேரி (60) தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.