சேலம்: ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா கட்டயகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (35). கார் ஓட்டுநராக இருந்து வரும் இவருக்கு, தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ரித்திக் ஸ்ரீ (10) என்ற மகனும், தனிஷ்கா ஸ்ரீ (6) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழரசி தனது கணவர் முருகேசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சங்ககிரி அருகே உள்ள பாப்பாங்காட்டில் உள்ள தனது தந்தை வீட்டிற்குச் சென்று தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்.21) தமிழரசியின் அண்ணன் சரத்குமாரும், அவரது பெரியப்பா மகன் சதீஷ்குமாரும் வீட்டு அருகே உள்ள பகவதி அம்மன் கோயில் முன்பு இருக்கும் இச்சிலி மரத்தில் கோழிக்குஞ்சை தூக்க வரும் கழுகை விரட்ட ஏர்கன் துப்பாக்கியில் குண்டை நிரப்பி, மரத்தின் கீழ் உள்ள திண்ணையில் வைத்திருந்துள்ளனர்.
அப்போது, அங்கு இருந்த சரத்குமாரின் 4 வயது மகன், அந்த தூப்பாக்கியின் டிரிக்கரை அழுத்தியதால், அதிலிருந்து வெளியேறிய குண்டு, அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த தமிழரசியின் வயிற்றில் பாய்ந்துள்ளது. இதனால் தமிழரசி படுகாயம் அடைந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்துவர்கள் மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்.22) உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தமிழரசியின் கணவர் முருகேசன், சங்ககிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், தூப்பாகியை பொதுவெளியில் அலட்சியமாக வைத்த சரத்குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு! - Install Automatic Doors In Buses