திருப்பத்தூர்: பெரிய கசிநாயக்கன்பட்டி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மற்றும் திருஞானம். அண்ணன், தம்பிகளான இருவருக்கும் சொந்தமான நிலத்தில் செல்ல பாதைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், பிரச்னைக்குரிய நிலத்தில் டிராக்டரைக் கொண்டு வந்து திருஞானம் ஏறு உழுது கொண்டிருந்த போது அண்ணன், தம்பி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் வெங்கடேசன் தாக்கியதில் திருஞானம் மற்றும் அவருடைய மனைவி தனலட்சுமி ஆகிய இருவரும் காயம் அடைந்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திருஞானம் தாக்கியதில் வெங்கடேசன் மகன் நந்தகுமாரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக திருஞானம், வெங்கடேசன் இருவரும் தனித்தனியே கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், திருஞானம் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேசனை கந்திலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனை அறிந்த டெல்லியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காவலராக பணிபுரிந்து வரும் வெங்கடேசனின் மகள் பூங்கொடி, இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் "கந்திலி போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர், நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன்.
என்னால் ஒழுங்காக பணி செய்ய முடியவில்லை, காவல்துறையினர் உதவி கேட்டும் ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர். நான் வாழ்வதா, சாவதா என தெரியவில்லை" என பேசியுள்ளார். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துணி வாங்குவது போல் நடித்து செல்போன் திருட்டு.. வைரலாகும் சிசிடிவி காட்சி - Cloth Shop Theft Cctv