சென்னை: நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்தியத் தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை நடை முறைச் சட்டம், இந்தியச் சாட்சிகள் சட்டத்துக்கு மாற்றாக, முறையே, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா சன்ஹிதா என்ற பெயர்களில் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அவற்றுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த புதிய சட்டங்கள், இந்த 2024ஆம் ஆண்டு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.சட்டத்தில் உள்ள பிரிவுகளில் எந்த மாற்றமும் இல்லாமல், அவற்றின் பெயர் மட்டுமே இந்தியில் வைக்கப்பட்டுள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குற்ற வழக்குகளை விசாரணைக்கு எடுப்பதற்கான கால வரம்பு தொடர்பான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார்.
அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன், புதிய சட்டத்திலும் கால வரம்பு குறித்த பிரிவுகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, புதிய சட்டத்தின் பெயரைக் கேட்ட போது, இந்தியிலிருந்த அதன் பெயரை அரசு வழக்கறிஞரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை.
இதையடுத்து, குற்றவியல் சட்டங்களை இந்தி பெயரில் புதிய சட்டமாக இயற்றியிருந்தாலும், தனக்கு இந்தி தெரியாது என்பதால் பழைய பெயர்களான ஐ.பி.சி மற்றும் சி.ஆர்.பி.சி. என ஆங்கில பெயர்களிலேயே தொடர்ந்து நீதிமன்றங்களில் குறிப்பிடுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு..!